×

தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் பைக் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் சுற்றிவளைத்து கைது:திருட்டு பணத்தில் உல்லாச வாழ்க்கை

அண்ணாநகர்: தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் தொடர்ச்சியாக பைக் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டு, அந்த பணத்தில் மது, மாதுவுடன் உல்லாச வாழ்க்கை நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை கோயம்பேடு, நொளம்பூர், மதுரவாயல், விருகம்பாக்கம், வளசரவாக்கம் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் தனியாக நடந்துசெல்லும் பெண்கள் மற்றும் வயதான பெண்களை குறிவைத்து வழிப்பறி சம்பவம் நடைபெற்று வந்தது. இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்படி, மதுரவாயல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பூபதிராஜா தலைமையில் உதவி ஆய்வாளர் செல்லத்துரை, ஏட்டு ராயப்பன் கொண்ட தனிப்படையினர் மேற்கண்ட பகுதிகளில் உள்ள சுமார் 700க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதில் ஒரு வாலிபர், பைக்கில் வந்து அனைத்து பகுதிகளிலும் தனியான நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டது பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில், அமைந்தகரையில் அஜித்குமார் (24) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், மதுரவாயல் மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த ரகுராமன் (21) என்பவர் திருடிய செல்போன்களை என்னிடம் தருவார். அந்த செல்போன்களை எனக்கு தெரிந்தவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை குறைந்த விலையில் விற்பனை செய்து, அந்த பணத்தை கொடுக்கும்போது அந்த பணத்தில் எனக்கு ஒரு பங்கு கொடுப்பார். மதுவும் வாங்கி தருவார்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் கொடுத்த தகவல்படி, ரகுராமனை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ‘‘இரவு நேரங்களில் தனியாக நடந்துசெல்லும் பெண்களிடம் பர்சை பறித்து சென்று, அதில் உள்ள பணத்தில் மது, கஞ்சா வாங்கி ஜாலியாக இருப்பேன். முதலில், கோயம்பேடு பகுதியில் பைக் திருடி அந்த பைக்கில் மதுரவாயல், வளசரவாக்கம், விருகம்பாக்கம், நொளம்பூர், அம்பத்தூர் பகுதிகளில் செல்போன், மணிபர்ஸ், பைக்குகள் திருடி வந்தேன். போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் மும்பைக்கு சென்று அங்கு வழிப்பறியில் ஈடுபட்டு அந்த பணத்தில் பெங்களூரூ, கேரளா, கொல்கத்தா, ஆந்திரா, மகாராஷ்டிரா குஜராத், தெலங்கானா மாநிலங்களில் கொள்ளையடிப்பேன்.

பின்னர், மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, திண்டுக்கல், விழுப்புரம், பொள்ளாச்சி ஆகிய மாவட்டங்களில் வழிப்பறியில் ஈடுபட்டேன். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு வந்து மீண்டும் வழிப்பறி, செல்போன்கள் பறிப்பில் ஈடுபட்டு வந்தேன். திருடிச் செல்லும் செல்போன்களை குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு யோசனை செய்தபோது அஜித்குமாரின் நட்பு கிடைத்தது. திருடும் செல்போன்களை அஜித்குமாரிடம் கொடுத்து அந்த செல்போன்களை குறைந்த விலையில் விற்பனை செய்து பணம் தருவார். அந்த பணத்தை வைத்து ஜாலியாகவும் உல்லாசமாகவும் இருந்தோம், என்று தெரிவித்துள்ளார்.

இதன்பிறகு ரகுராமன், அஜித்குமார் ஆகியோரிடம் இருந்து 6 செல்போன்கள், 5 பைக்குகள் பறிமுதல் செய்தனர். இதன்பிறகு விசாரணை நடத்திவிட்டு 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் பைக் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் சுற்றிவளைத்து கைது:திருட்டு பணத்தில் உல்லாச வாழ்க்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Annanagar ,Chennai Coimbatore ,Nolampur ,Madurawayal ,Virugambakkam ,Valasaravakkam ,Ambattur ,
× RELATED கோயம்பேடு பகுதியில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு