×

தொடரை வென்றது இந்தியா: இங்கிலாந்துக்கு ஹாட்ரிக் தோல்வி

ராஞ்சி: இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 4வது டெஸ்ட் ராஞ்சியில் பிப்.23ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353ரன் குவித்தது. அந்த அணியின் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 122, ஒல்லி ராபின்சன் 58ரன் எடுத்தனர். இந்திய தரப்பில் ஜடஜோ 4, அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3, சிராஜ் 2, அஷ்வின் 1 விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து துருவ் 90, ஜெஸ்வாஸ் 73ரன் விளாச இந்தியா முதல் இன்னிங்சில் 307ரன் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 5, ஹார்ட்லி 3, ஆண்டர்சன் 2 விக்கெட் கைப்பற்றினர்.

தொடர்ந்து 46ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து வீரர்கள், இந்தியாவின் சுழலை தாக்குப் பிடிக்க முடியாமல் 145ரன்னில் சுருண்டனர். அணியில் அதிகபட்சமாக கிரெவ்லி 60, பேர்ஸ்டோ 30ரன் எடுத்தனர். இந்திய சுழல்கள் அஷ்வின் 5, குல்தீப் 4, ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தனர். அதனையடுத்து 191ரன் பின்தங்கிய 192ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 2வது இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 3வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40ரன் எடுத்திருந்தது.

தொடர்ந்து 4வது நாளான நேற்று களத்தில் இருந்த கேப்டன் ரோகித் 24, ஜெய்ஸ்வால் 16ரன்னுடன் 2வது இன்னிங்சை தொடர்ந்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். ஜெய்ஸ்வால் 37ரன்னிலும், அரைசதம் விளாசிய ரோகித் 55ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இடையில் வந்த ரஜத் பத்திதார் 0, ஜடேஜா 4, சர்ஃபரஸ் கான் 0 ரன்னில் வெளியேற்றி, சுழல் சோயிப் பஷிர் அதிர்ச்சி அளித்தார். அதனால் இந்தியாவின் எளிய வெற்றி கைமாறிப் போகும் நிலை ஏற்பட்டது.

ஆனால் 6வது விக்கெட்டுக்கு இணை சேர்ந்த சுப்மன் கில், விக்கெட் கீப்பர் துருவ் ஆகியோர் பொறுப்புடனும், பொறுமையுடனும் விளையாடி இலக்கை எட்டினர். அதனால் இந்தியா 61ஓவரில் 5விக்கெட்களை இழந்து 192ரன் எடுத்தது. அதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற இந்தியா தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இது சொந்தமண்ணில் இந்தியா தொடர்ச்சியாக பெறும் 17வது தொடர் வெற்றியாகும். வெற்றிக்கு காரணமான சுப்மன் 52, ஆட்ட நாயகன் துருவ் 39ரன்னுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் சோயிப் 3விக்கெட் அள்ளினார். இந்த 2 அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது

* இந்த வெற்றியின் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்தியா 2வது இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. முதல் இடத்தில் முன்னாள் சாம்பியன் நியூசிலாந்தும், 3வது இடத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும் உள்ளன.
* இந்த தொடரில் முதல் டெஸ்ட்டில் தோற்ற இந்தியா அடுத்த 3 டெஸ்ட்களில்லும் வென்று தொடரை கைப்பற்றி உள்ளது. இதுபோல் முதல் டெஸ்ட்டில் தோற்றாலும், ஏற்கனவே இலங்கையை ஒருமுறையும், இங்கிலாந்தை 2முறையும், ஆஸியை 3முறையும் வீழ்த்தி இந்தியா தொடர்களை கைப்பற்றி உள்ளது.
* கேப்டன் பென் ஸ்டோக்ஸ், தலைமை பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் இணை முதல் முறையாக தொடரை இழந்துள்ளது. அதுமட்டுமல்ல டெஸ்ட் ஆட்டங்களில் சந்திக்கும் முதல் ஹாட்ரிக் தோல்வியும் இதுதான்.
* சொந்த மண்ணில் 200க்குள் வெற்றி இலக்காக கொண்டு இந்தியா 33 டெஸ்ட்களில் விளையாடி உள்ளது. அவற்றில் 30 டெஸ்ட்களில் வெற்றியும், 3டெஸ்ட்களில் டிராவும் செய்துள்ளது.
* இரு அணிகளிலும் 2வது இன்னிங்சில் சுழல் பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தினர். கூடவே அவர்கள் மட்டுமே விக்கெட்களை கைப்பற்றினர்.
* வெற்றியை இலக்காக கொண்டு நிதானமாக விளையாடியதால் தொடர்ந்து 31 ஓவரில் இந்தியா ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. பிறகு 46.6வது ஓவரில் துருவ் பவுண்டரி அடித்தார். அதற்கு முன் 15.6வது ஓவரில் ஜெய்ஸ்வால் பவுண்டரி அடித்திருந்தார்.

மீண்டும் ஹர்திக்
காயம் காரணமாக, அக்டோபர் மாதம் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்தார் ஹர்திக் பாண்டியா. இந்நிலையில் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான டி.ஓய்.பாடீல் கோப்பை போட்டியில் நேற்று ஹர்திக் களமிறங்கினார். ரிலையன்ஸ் அணியின் கேப்டனாக களம் கண்ட அவர், பிபிசிஎல் அணியை வீழ்த்த காரணமாக இருந்தார்.

ஆந்திராவுக்காக ஆட மாட்டேன்
ரஞ்சி கோப்பை தொடரின் ஆரம்பத்தில் ஆந்திர அணியின் கேப்டனாக ஹனுமன் விகாரி(30, காக்கிநாடா) இருந்தார். பெங்காலுக்கு எதிரான ஆட்டத்தில் சக வீரர் ஒருவரை கடிந்துக் கொண்டார். அதனால் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.. அவர் கடிந்துக் கொண்ட வீரர், திருப்பதியில் செல்வாக்கு மிக்க அரசியல்வாதி ஒருவரின் மகன் என்பதால் விகாரி, கேப்டன் விலக நேர்ந்ததாக தகவல் எழுந்தது. இந்நிலையில் நேற்று ஆந்திர அணி காலிறுதியில் தோற்று வெளியேறியது. அதன் பிறகு சமூக ஊடகமொன்றில் விகாரி, ‘என் சுயமரியாதையை இழந்து விட்டேன். நான் தவறு ஏதும் செய்யாமல் கேப்டன் பதவியை விட்டு விலக என்னை கட்டாயப்படுத்தினர். இனிமேல் ஆந்திர அணிக்காக விளையாட மாட்டேன். நான் கடிந்துக் கொண்ட வீரரின் பெயரை வெளியிட மாடே்டேன்’ என்று கூறியுள்ளார்.

 

The post தொடரை வென்றது இந்தியா: இங்கிலாந்துக்கு ஹாட்ரிக் தோல்வி appeared first on Dinakaran.

Tags : India ,England ,Ranchi ,Dinakaran ,
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது