×

பெரியார் பல்கலையில் ஊழல் உறுதியான நிலையில் பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய ஆதாரம் கேட்கும் துணைவேந்தர்: உயர்கல்வித்துறைக்கு கடிதம் எழுதியதால் சர்ச்சை

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் நடந்த பல்வேறு பணி நியமனங்கள் முதல் பொருட்கள் கொள்முதல் செய்தது வரை ஏராளமான முறைகேடுகள் மற்றும் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, 13 குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடந்தது. இதில், கணினி அறிவியல் துறைத்தலைவரும், பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளருமான தங்கவேல் மீது தெரிவிக்கப்பட்ட 8 குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன.

இதனிடையே, இம்மாத இறுதியுடன் தங்கவேல் ஓய்வுபெற உள்ளதால், அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திக் கடந்த 8ம் தேதி, துணைவேந்தர் ஜெகநாதனுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், இன்று வரை அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை கேட்டு, துணைவேந்தர் ஜெகநாதன் உயர்கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, அதிகார வரம்பு மீறலாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பல்கலைக்கழகத்தின் பதிப்புத்துறையில் நடந்த ஊழலை உறுதி செய்த லஞ்ச ஒழிப்புத்துறை, அதுகுறித்த பூர்வாங்க விசாரணைக்கு அனுமதி கேட்டபோது, ஆதாரம் இல்லை என துணைவேந்தர் மறுத்துவிட்டார்.

அதேசமயம், பல்கலைக்கழகத்தில் தனக்கு வேண்டாதவர்கள் மீதான பொய்புகார்கள் மீது எந்தவித விசாரணையும் இன்றி கடும் நடவடிக்கைகளை எடுத்தார். தற்போது உயர்கல்வித்துறையின் நடவடிக்கைக்கே ஆதாரம் கேட்டு, தனது அதிகார எல்லையை மீறியுள்ளதாக பேராசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், ‘தங்கவேலை உடனடியாக சஸ்பெண்ட் செய்யாவிட்டால் துணைவேந்தரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்று பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன் மற்றும் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சக்திவேல் தெரிவித்து உள்ளனர்.

The post பெரியார் பல்கலையில் ஊழல் உறுதியான நிலையில் பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய ஆதாரம் கேட்கும் துணைவேந்தர்: உயர்கல்வித்துறைக்கு கடிதம் எழுதியதால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Periyar University ,Higher Education Department ,Salem ,Salem Periyar University ,AIADMK ,Higher Education ,Dinakaran ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...