×

திருக்குறள் முற்றோதல் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்று, காசோலை: கலெக்டர் வழங்கினார்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற 2022-23ம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் திறனறித் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் ரூ.15 ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 2022-23ம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்பட்ட திருக்குறள் முற்றோதல் திறனறித் தேர்வில் பொன்னேரி வட்டம், ராமநாதபுரம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்ற மாணவிகள் தி.கீர்த்தனா, கோ.தியாஸ்ரீ, ப.யோகஸ்ரீ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 3 மாணவிகளுக்கும், தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.45,000 பரிசுத் தொகைகளுக்குரிய காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மேலும் மாணவிகளுக்கு சிறப்பு செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தலா ரூ.2 ஆயிரத்திற்கு புத்தகத் திருவிழாவில் நூல்களும் மரக்கன்றும் வழங்கிப் பாராட்டியதுடன் அவர்களுக்குப் பயிற்சி அளித்த அப்பள்ளியின் தலைமையாசிரியர் ச.பிரேமாவையும் பாராட்டினார். மேலும் திருக்குறள் பயின்றதோடு மட்டுமின்றி திருக்குறளின் பொருளையும் உணர்ந்து படித்து அதனை பின்பற்றி அறவழியில் நடந்து வாழ்க்கையில் பெரும் உச்சங்களை அடைவதை மாணவர்கள் தங்கள் குறிக்கோளாகக் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்தார். இதில் மாவட்ட முதன்மை கல்லூரி அலுவலர் ரவிசந்திரன், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அன்பரசி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருக்குறள் முற்றோதல் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்று, காசோலை: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Tirukkural Round ,Thiruvallur ,District Collector ,T. Prabhushankar ,Thirukkural Badi Examination ,Tamil Development Department ,Tiruvallur District Collector ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில்...