×

15ம் நூற்றாண்டு விஜயநகர கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

ரிஷிவந்தியம் : கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே வாணாபுரம் வட்டம், சீர்பனந்தல் கிராமத்தில் கடம்பூர் சாலையின் இடது புறம் 15ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்ரீ வீரப்பிரதாப ராயர் தேவராய மகா தேவரின் ஆட்சியின் கடைசி ஆண்டான 1422-23ல், சிவன் கோயிலுக்கு தானம் அளிக்கப்பட்டதை கூறும் சூல ஸ்தாபனக் கல்வெட்டு என கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கண்டுபிடித்தனர். ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன் தலைமையில், கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், பண்ருட்டி இம்மானுவேல், திருக்கோவிலூர் அன்பழகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து ஆய்வு மையத்தின் தலைவர் சிங்கார உதியன் கூறுகையில்: இப்பலகை கல்வெட்டு 6 1/4 அடி உயரமும், 2 3/4 அடி அகலமும் கொண்டது. இதன் முன் பக்கத்தில் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவிலான சூலம் பீடத்தில் உள்ளது. சூலத்தின் வலது பக்கத்தில் மலையும், மலைக்கு கீழ் குடையும், அதன் கீழ் அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கும் காணப்படுகின்றன. சூலத்தின் இடது புறம் மேலே பிறையும், பிறையின் கீழ் வெண்சாமரமும், அதன் கீழ் அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கும் காணப்படுகின்றன.

சூலத்துக்கு மேல் விரித்த தாமரைப்பூ வெட்டப்பட்டுள்ளது. இச்சின்னங்களுக்கு கீழ் பகுதியில் 17 வரிகளும், பின் பகுதியில் 25 வரிகளும் ஆக மொத்தம் 42 வரிகள் எழுத்துக்கள் வெட்டப்
பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது கல்வெட்டுத்துறை மாணவர்கள் இளையனார்குப்பம் அய்யப்பன், பதீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

The post 15ம் நூற்றாண்டு விஜயநகர கால கல்வெட்டு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Rishivantiyam ,Kadampur road ,Seerbanandal village ,Vanapuram circle ,Kallakurichi district ,Sri Veerapradapa ,Raya ,Maha Devar ,Dinakaran ,
× RELATED ரிஷிவந்தியம் அருகே சாலையில் தூங்கிய பெண் மீது மினி லாரி ஏறி பலி