×

அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராகமாட்டார்: ஆம் ஆத்மி கட்சி

டெல்லி: அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராகமாட்டார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆஜராக கெஜ்ரிவாலுக்கு 7வது முறையாக சம்மன் அமலாக்கத்துறை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட மதுபான கொள்கை முடிவுகளில் தனியாருக்கு லாபம் ஏற்படும் வகையில் அரசு செயல்பட்டதாகவும் இதனால் அரசுக்கு அதிகளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா அளித்த புகாரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் டெல்லி அமைச்சர்கள் சத்தியேந்திர ஜெயின், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதைத் தொடர்ந்து, 6 முறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் புறக்கணித்து வந்தார். இந்நிலையில் ஏழாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தற்போது, அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராகமாட்டார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. “நீதிமன்றத்தில் அடுத்த விசாரணை மார்ச் 16ம் தேதி தொடங்குகிறது.

தினமும் சம்மன் அனுப்புவதற்கு பதிலாக, நீதிமன்றத்தின் முடிவுக்காக அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும். ஆம் ஆத்மி இந்திய கூட்டணியை விட்டு வெளியேற மாட்டோம். மோடி அரசு இதுபோன்ற அழுத்தத்தை உருவாக்கக் கூடாது” என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

The post அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராகமாட்டார்: ஆம் ஆத்மி கட்சி appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Enforcement Directorate ,Aam Aadmi Party ,Enforcement Department ,Kejriwal ,Dinakaran ,
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை...