×

இந்தியாவுக்கு 192 ரன் இலக்கு: தொடரை வெல்லும் வாய்ப்பு பிரகாசம்

ராஞ்சி: இந்திய அணியுடனான 4வது டெஸ்டில், அஷ்வின் – குல்தீப் சுழல் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 145 ரன்னுக்கு சுருண்டது. 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 3ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன் எடுத்துள்ளது.ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன் குவித்து ஆல் அவுட்டானது (104.5 ஓவர்). அபாரமாக விளையாடிய ஜோ ரூட் 122 ரன்னுடன் (274 பந்து, 10 பவுண்டரி) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 4, ஆகாஷ் தீப் 3, சிராஜ் 2, அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 73 ரன், கில் 38 ரன் எடுத்தனர். துருவ் ஜுரெல் 30 ரன், குல்தீப் 17 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு 76 ரன் சேர்த்தது. ஜுரெல் அரை சதம் அடித்து அசத்தினார். குல்தீப் 28 ரன் (131 பந்து, 2 பவுண்டரி), ஆகாஷ் தீப் 9 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

ஜுரெல் 90 ரன் (149 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஹார்ட்லி பந்துவீச்சில் கிளீன் போல்டாக, இந்தியா முதல் இன்னிங்சில் 307 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (103.2 ஓவர்). சிராஜ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் சோயிப் பஷிர் 5, ஹார்ட்லி 3, ஆண்டர்சன் 2 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 46 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அஷ்வின் – குல்தீப் யாதவ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 53.5 ஓவரில் 145 ரன் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது.

தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி அதிகபட்சமாக 60 ரன் (91 பந்து, 7 பவுண்டரி), பேர்ஸ்டோ 30, ஃபோக்ஸ் 17, டக்கெட் 15, ரூட் 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர் (3 பேர் டக் அவுட்). சோயிப் பஷிர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி உதிரியாக ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காதது குறிப்பிடத்தக்கது.

அஷ்வின் 15.5 ஓவரில் 51 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட குல்தீப் 15 ஓவரில் 2 மெய்டன் உள்பட 22 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்தினார். ஜடேஜா 1 விக்கெட் எடுத்தார். 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 3ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன் எடுத்துள்ளது (8 ஓவர்). கேப்டன் ரோகித் 24 ரன், ஜெய்ஸ்வால் 16 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.கை வசம் 10 விக்கெட் இருக்க வெற்றிக்கு இன்னும் 152 ரன் மட்டுமே தேவை என்ற நிலையில், 4ம் நாளான இன்று இந்தியா ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

The post இந்தியாவுக்கு 192 ரன் இலக்கு: தொடரை வெல்லும் வாய்ப்பு பிரகாசம் appeared first on Dinakaran.

Tags : India ,Ranchi ,England ,Ashwin ,Kuldeep ,Prakasam ,Dinakaran ,
× RELATED நிலமோசடி வழக்கு ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி மதிப்புள்ள நிலம் பறிமுதல்