×

கஞ்சா கடத்திய இருவர் கைது

மேட்டூர், பிப்.25: கொளத்தூரில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்து, 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேட்டூர் அருகே கொளத்தூரில், கஞ்சா கடத்தப்படுவதாக கொளத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாவித்திரி தலைமையில் போலீசார், கொளத்தூர் கருங்கரடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக டூவீலரை நிறுத்தி, போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அதில் வந்த 2 பேரிடமிருந்து ₹1 லட்சம் மதிப்பிலான 6 கிலோ கஞ்சா பண்டல்கள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவர்கள் கொளத்தூர் சத்யா நகரை சேர்ந்த தங்கமணி(40), குமார் (35) என்பதும், கொளத்தூர் கருங்கரட்டை சேர்ந்த கோவிந்தராஜ் (42)என்பவருக்கு, கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.

அப்போது, குமார் தப்பியோடி விட்டார். இதையடுத்து தங்கமணி, கோவிந்தராஜை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா, ஒரு டூவீலர், 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். தங்கமணி காஞ்சிபுரத்தில் கிரசர் ஒன்றில் வேலை செய்யும் போது, பெங்களூரை சேர்ந்த சசி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவரிடமிருந்து கஞ்சாவை வாங்கி வந்து, வீட்டின் அருகே பதுக்கி வைத்து, விற்பனைக்கு எடுத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் மூவரும் அங்கிருந்து கஞ்சாவை வாங்கி வந்து கொளத்தூர், மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருவதும் தெரிந்தது. இதையடுத்து தங்கமணி, கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து, மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post கஞ்சா கடத்திய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Mettur ,Kolathur ,Inspector ,Savithiri ,Dinakaran ,
× RELATED மேட்டூர் வலதுகரை வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்