×

இந்தியா கூட்டணியில் மேலும் ஒரு உடன்பாடு காங்கிரஸ்-ஆம்ஆத்மி தொகுதி பங்கீடு: டெல்லி, குஜராத், அரியானா, கோவா, சண்டிகரில் கூட்டணி

* பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் தனித்தனியாக போட்டி

புதுடெல்லி: இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் இடையே டெல்லி, குஜராத், அரியானா, கோவா, சண்டிகரில் தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் இருகட்சிகளும் தனித்தனியே போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜவை எதிர்த்து நாட்டில் உள்ள 28 கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. இந்த கூட்டணியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், உத்தரபிரதேசத்தில் ஜெயந்த் சவுத்திரி தலைமையிலான ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சிகள் விலகி பா.ஜவுடன் இணைந்துவிட்டன. இதை தொடர்ந்து மீதம் உள்ள கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. முதன்முதலாக காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்தது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் காங்கிரஸ் 17, சமாஜ்வாடி கட்சி 63 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. மபியில் உள்ள 29 தொகுதிகளில் காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், சமாஜ்வாடி 1 தொகுதியிலும் போட்டியிடுகிறது.

அடுத்ததாக ஆம்ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டை முடிவு செய்துள்ளது. டெல்லியில் ஆம்ஆத்மி 4, காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் 24 தொகுதியிலும், ஆம்ஆத்மி 2 தொகுதியிலும், 10 தொகுதி கொண்ட அரியானாவில் காங்கிரஸ் 9 தொகுதியிலும், ஆம்ஆத்மி 1 தொகுதியிலும், கோவாவில் உள்ள 2 தொகுதிகளிலும், சண்டிகரில் உள்ள ஒரு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதியிலும் காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி தனித்தனியாக போட்டியிடுவது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் முகுல்வாஸ்னிக் மற்றும் ஆம்ஆத்மி மூத்த தலைவர் சந்தீப் பதக் ஆகியோர் இணைந்து நேற்று கூட்டாக அறிவித்தனர்.

காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்னிக் கூறுகையில்,’ பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஆம் ஆத்மியும், காங்கிரஸ் கட்சியும் தனித்தனியாக போட்டியிட முடிவு செய்துள்ளன. குஜராத் மாநிலத்தில் பருச் தொகுதியை ஆம் ஆத்மி கட்சிக்கு வழங்கும் முடிவை அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் மதிப்பார்கள் என்று நம்புகிறேன். எல்லா சூழ்நிலைகள் மற்றும் ஆலோசனைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, இரு கட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் செய்துள்ளோம். ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களும் இந்த முடிவை மதிப்பார்கள். அதே போல் ஆம் ஆத்மி கட்சியினரும் இந்த ஒப்பந்தத்தை பின்பற்றுவார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது’ என்றார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சந்தீப் பதக் கூறுகையில்,’ நாடுதான் முதலில் முக்கியம். கட்சிகள் இரண்டாவது. எனவே தான் இந்தியா கூட்டணி உருவாகி இருக்கிறது. மக்கள் புத்திசாலிகள். அவர்கள் அனைத்தையும் புரிந்து கொள்வார்கள். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றியை உறுதி செய்ய பாடுபடுவோம். காங்கிரஸ் கட்சியும், ஆம்ஆத்மி கட்சியும் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பா.ஜவை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. இன்று நாட்டிற்கு வலுவான மாற்று தேவை. நாட்டின் நலன் கருதி இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியால் பா.ஜவின் கணக்கு மாறும். இந்தியா கூட்டணியின் பிரச்சார உத்திகள் பின்னர் விவாதிக்கப்படும். எங்கள் கூட்டணி பாஜவின் கணக்குகள் மற்றும் வியூகத்தை சீர்குலைக்கும். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளையும் பாஜ ஒழித்து வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களை சிறைக்கு அனுப்புகிறார்கள். விவசாயிகளும் அநியாயமாக நடத்தப்பட்டுள்ளனர்.மக்கள் பணவீக்கம் மற்றும் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.’ என்றார்.

* அகமது பட்டேல் மகன், மகள் ஏமாற்றம்

குஜராத் மாநிலத்தில் ஆம்ஆத்மிக்கு ஒதுக்கப்பட்ட பருச் தொகுதி சோனியாவின் தனிப்பட்ட ஆலோசகராக இருந்து மறைந்த அகமது பட்டேலின் சொந்த தொகுதி. அங்கு அவரது மகள் அல்லது மகனை நிறுத்த ராகுல் விரும்புவதால் இதுபற்றி ஆம்ஆத்மியுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதனால்தான் கூட்டணி அறிவிக்க தாமதம் ஆகிவிட்டது. ஆனால் ஆம்ஆத்மி அந்த தொகுதி விரும்பி கேட்டு பெற்றுவிட்டது. இந்த தொகுதியில் இருந்து அகமது பட்டேல் 3 முறை வென்று எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தொகுதி ஆம்ஆத்மிக்கு ஒதுக்கப்பட்டதால் அகமது பட்டேல் மகன் பைசல் பட்டேல், மகள் மும்தாஜ் பட்டேல் ஆகியோர் அதிருப்தி தெரிவித்தனர். இந்த முடிவால் காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடையவில்லை. இருப்பினும் காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக பைசல் பட்டேல் கூறுகையில்,’ பருச் மக்களுக்காக எனது தந்தை நிறைய செய்தார். இது எங்கள் தொகுதி. மனசாட்சி உள்ள எந்த காங்கிரஸ் தொண்டரும் ஆம்ஆத்மி வேட்பாளரை ஏற்க மாட்டார். ஆனால் கட்சி என்ன சொன்னாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்’ என்றார்.

* சந்தர்ப்பவாத கூட்டணி பா.ஜ கோபம்

பாஜ தலைவர் ஹர்தீப்சிங் பூரி கூறுகையில், ‘ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி. அங்கு முழுவதும் முரண்பாடு உள்ளது. அவர்கள் கூட்டணியில் மிகவும் வினோதமான அரசியல் கலவை உள்ளது. இந்த கூட்டணி, அவர்களின் சொந்த வாக்காளர்களுக்கு கூட அதிர்ச்சியை அளிக்கும். ஆம் ஆத்மி கட்சி எப்படி உருவானது என்பதை மக்கள் தெளிவாக நினைவில் வைத்திருப்பார்கள். அவர்கள் டெல்லியில் ஒன்றாக இருப்பார்கள், ஆனால் பஞ்சாபில் ஒருவருக்கொருவர் எதிராக இருப்பார்கள். அரசியல் மறதியால் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது’ என்றார். ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லெகி கூறுகையில்,’ காங்கிரஸ் கூட்டணி மூலம் டெல்லி மக்களுடனான தொடர்பை முதல்வர் கெஜ்ரிவால் இழந்துவிட்டதைக் காட்டுகிறது. காங்கிரஸ் கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கெஜ்ரிவால் தனது பிள்ளைகளின் பெயரில் சத்தியம் செய்தார். இப்போது காங்கிரசுடன் கூட்டணி வைக்க முடிவு செய்ததன் மூலம், டெல்லி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதைக் காட்டியுள்ளார். இந்த கூட்டணியை கண்டு டெல்லி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்’ என்றார்.

The post இந்தியா கூட்டணியில் மேலும் ஒரு உடன்பாடு காங்கிரஸ்-ஆம்ஆத்மி தொகுதி பங்கீடு: டெல்லி, குஜராத், அரியானா, கோவா, சண்டிகரில் கூட்டணி appeared first on Dinakaran.

Tags : India ,Congress-Aam Aadmi Party ,Delhi ,Gujarat ,Haryana ,Goa ,Chandigarh ,Punjab ,New Delhi ,Ariyana ,Congress ,Aam Aadmi Party ,India alliance ,Dinakaran ,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...