×

இங்கிலாந்து 353 ரன் குவிப்பு சோயிப் பஷிர் சுழலில் இந்திய அணி திணறல்: ஜெய்ஸ்வால் அரை சதம்

ராஞ்சி: இங்கிலாந்து அணியுடனான 4வது டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்துள்ளது. ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன் எடுத்திருந்தது. ஜோ ரூட் 106 ரன் (226 பந்து, 9 பவுண்டரி), ராபின்சன் 31 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு 102 ரன் சேர்த்தது.

அரை சதம் அடித்த ராபின்சன் 58 ரன் எடுத்து (96 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) ஜடேஜா சுழலில் விக்கெட் கீப்பர் ஜுரெல் வசம் பிடிபட்டார். ஜடேஜா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சோயிப் பஷிர், ஜேம்ஸ் ஆண்டர்சன் டக் அவுட்டாக, இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன் குவித்து ஆல் அவுட்டானது (104.5 ஓவர்). அந்த அணி 6 ரன்னுக்கு கடைசி 3 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. அபாரமாக விளையாடிய ஜோ ரூட் 122 ரன்னுடன் (274 பந்து, 10 பவுண்டரி) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 4, ஆகாஷ் தீப் 3, சிராஜ் 2, அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, ஜெய்ஸ்வால் – கேப்டன் ரோகித் இணைந்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கினர். ரோகித் 2 ரன் மட்டுமே எடுத்து ஆண்டர்சன் வேகத்தில் ஃபோக்ஸ் வசம் பிடிபட, இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. எனினும், ஜெய்ஸ்வால் – கில் ஜோடி 2வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 82 ரன் சேர்த்தது.

கில் 38 ரன், பத்திதார் 17, ஜடேஜா 12 ரன், ஜெய்ஸ்வால் 73 ரன் எடுத்து (117 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) இளம் சுழல் சோயிப் பஷிர் (20 வயது) பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். சர்பராஸ் கான் 14 ரன், அஷ்வின் 1 ரன் எடுத்து ஹார்ட்லி பந்துவீச்சில் பெவிலியன் திரும்ப, இந்தியா 55.2 ஓவரில் 177 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், துருவ் ஜுரெல் – குல்தீப் யாதவ் இணைந்து உறுதியுடன் போராடினர். இவர்களைப் பிரிக்க இங்கிலாந்து தரப்பு மேற்கொண்ட முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை. 2ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்துள்ளது. ஜுரெல் 30 ரன், குல்தீப் 17 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து பந்துவீச்சில் சோயிப் பஷிர் 4, ஹார்ட்லி 2, ஆண்டர்சன் 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 3 விக்கெட் இருக்க, இந்தியா இன்னும் 134 ரன் பின்தங்கிய நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post இங்கிலாந்து 353 ரன் குவிப்பு சோயிப் பஷிர் சுழலில் இந்திய அணி திணறல்: ஜெய்ஸ்வால் அரை சதம் appeared first on Dinakaran.

Tags : England ,Shoaib Bashir ,Jaiswal ,Ranchi ,India ,Jharkhand State Cricket Association Stadium ,
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது