×

ஜெயலலிதா பிறந்தநாள்; 76 கிலோ கேக் வெட்டி எடப்பாடி கொண்டாட்டம்: ஓ.பன்னீர்செல்வம் தனியாக மாலை அணிவித்து மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு நேற்று 76வது பிறந்த நாளாகும். இதையொட்டி நேற்று காலை 10 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பிறந்தநாள் சிறப்பு மலரை எடப்பாடி வெளியிட்டார். அதிமுக கொடியை ஏற்றி வைத்து, அதிமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, 76 கிலோ எடை கொண்ட கேக்கை எடப்பாடி பழனிசாமி வெட்டி அனைத்து தலைமை கழக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கேக் வழங்கினார்.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதேபோன்று அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளையொட்டி, நேற்று காலை 10 மணிக்கு சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உடனிருந்தனர். அதேபோன்று, சென்னை போயஸ் கார்டன் புதிய இல்லத்தில் சசிகலாவும் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

The post ஜெயலலிதா பிறந்தநாள்; 76 கிலோ கேக் வெட்டி எடப்பாடி கொண்டாட்டம்: ஓ.பன்னீர்செல்வம் தனியாக மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.

Tags : Jayalalitha ,Edappadi ,O. Panneerselvam ,Chennai ,chief minister ,AIADMK ,General Secretary ,Jayalalithaa ,Avvai Shanmugam Road ,Rayapetta ,AIADMK General Secretary ,MGR ,
× RELATED வம்பு சண்டைக்கு போறதில்ல; வந்த சண்டையை...