×

ரூ.188.09 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி தொழில் வளாகங்கள் தொழிலாளர் தங்கும் விடுதி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் முறையே ரூ.94.67 கோடி மற்றும் ரூ.63.95 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி தொழில் வளாகங்களையும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.29.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தொழிலாளர்கள் தங்கும் விடுதியையும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: தொழிற் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாம் இடம் வகிக்கிறது. தொழில் துவங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் முதல் இடமும், மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் முதல் இடமும் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மகளிரில் 42 சதவீத பெண்கள் பணிக்கு செல்லும் பெண்களாக உள்ளனர்.

கலைஞர் வேளாண் சார்ந்த தொழில்களுடன் தொலைநோக்கு திட்டங்களான சிட்கோ, சிப்காட் போன்ற நிறுவனங்களின் மூலம் நவீன தமிழ்நாட்டை படைத்திருக்கிறார். அதன் வளர்ச்சியை தான் இன்று நாம் காண்கிறோம். இதுபோன்று தொலைநோக்கு திட்டங்கள் இல்லாத காரணத்தினால்தான் வடமாநில தொழிலாளர்கள் இன்று தென் மாநிலங்களுக்கு புலன் பெயர்ந்து வந்துள்ளனர். அவர்களின் நலனையும் நம் திராவிட மாடல் அரசு பாதுகாத்து வருகிறது. கலைஞரைப் போலவே, தமிழக முதல்வரும் குறு, சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தியதன் காரணமாக பல்வேறு சாதனைகளை படைந்து வருகிறார். கடந்த மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எம்எஸ்எம்இ துறையின் சார்பாக ரூ. 63,573 கோடி முதலீடுகள் ஈர்க்கும் 5,068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் மூலம் 2 லட்சத்து 51 ஆயிரத்திற்கு மேல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 71 ஐ.டி.ஐ. கல்வி நிறுவனங்களை ரூ.2871 கோடி மதிப்பில் சென்டர் ஆப் எக்ஸலென்ஸ் ஆக தரம் உயர்த்தவும், மானாமதுரை, ஒட்டன்சத்திரம், திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் ரூ.32 கோடி மதிப்பில் புதிய தொழிற்பேட்டை அமைக்க நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவோர்கள் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி முதல்வரின் 2030ல் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை அடைய ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post ரூ.188.09 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி தொழில் வளாகங்கள் தொழிலாளர் தங்கும் விடுதி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Apartment Industrial Complex ,Labor Hostel ,Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,Tamil Nadu Small Business Development Corporation ,Micro, Small and Medium Enterprises Department ,Guindy ,Ambattur ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...