×

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடி கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்களை சேர்க்க முயற்சி? ஒருவர் கூட சிக்காததால் ‘எம்எல்எம்’ திட்டத்தை அறிவித்தார் அண்ணாமலை

சென்னை: பிரதமர் மோடி தமிழகம் வரும்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களை இழுக்க அண்ணாமலை செய்த முயற்சி இதுவரை பலிக்கவில்லை. இதனால், கட்சியில் சமீபத்தில் சேர்ந்த 15 எம்எல்ஏக்களுக்கும் ‘எம்எல்எம்’ திட்டத்தை அறிவித்து அதிர்ச்சி அளித்துள்ளார். பிரதமர் மோடி வரும் 27ம் தேதி தமிழகம் வருகிறார். திருப்பூரில் நடைபெறும் பாஜ பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் என்ற பெயரில் நகருக்குள் மட்டும் சிறிது தூரம் நடந்து சென்று, பின்னர் வாகனத்தில் செல்லும் பயணத்தை மேற்கொண்டார். இதன் நிறைவு விழாதான் திருப்பூரில் நடக்கிறது. இந்த விழாவில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய எம்எல்ஏக்கள் சிலரையாவது இழுக்க வேண்டும் என்று அண்ணாமலை தீவிரம் காட்டி வருகிறார்.

இதற்காக கொங்கு மண்டலத்தில் உள்ள முன்னாள் அமைச்சர்களும், தற்போது எம்எல்ஏக்களாக உள்ள சிலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினாராம். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது உளவுத்துறை ஐஜியாக இருந்தவர்தான், அண்ணாமலைக்கு ஆதரவாக, தற்போது செயல்பட்டு வருகிறாராம். அவர்தான் கொங்கு மண்டல எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களிடம் பேசுகிறாராம். அதில் எடப்பாடி பழனிசாமிக்கு மனச்சாட்சி என்று சொல்லும் மணியானவர்களில் ஒருவரையாவது இழுக்க வேண்டும் என்று தீவிரம் காட்டுகிறார்களாம். அதேபோல வழக்குகளில் சிக்கி தவிக்கும் முன்னாள் அமைச்சர்கள் சிலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். அதோடு இரு நாட்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தார். அப்போது சில முன்னாள் அமைச்சர்களிடம் அவரே பேசியதாகவும், அப்போது மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் முன்னாள் அமைச்சர்கள் யாரும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அதிமுகவில் பணத் தேவை உள்ள எம்எல்ஏக்கள் யார் என்ற பட்டியல் தயாரித்த மாஜி உளவு ஐஜி, அதை அண்ணாமலையிடம் வழங்கியுள்ளார். அந்த பட்டியலில் உள்ள எம்எல்ஏக்களிடம் தற்போது பண ஆசை காட்டப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரையாவது இழுத்து தனது செல்வாக்கை மோடியிடம் காட்ட வேண்டும். இதற்காக எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை என்று கூறி வருகிறாராம். இதுவரை பொறுப்பில் இருப்பவர்கள் யாரும் சிக்காததால், அண்ணாமலை கடும் அதிர்ச்சி அடைந்தாராம். இதனால் சமீபத்தில் டெல்லியில் பாஜவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 15 பேரையும் அழைத்த அண்ணாமலை, அவர்கள் எம்எல்எம் திட்டத்தை அறிவித்தாராம். அதாவது முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளை அழைத்து வரவேண்டும்.

அவ்வாறு அழைத்து வருகிறவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, உங்களுக்கு பாஜவில் கட்சிப் பதவியும், சட்டப்பேரவை தேர்தலில் சீட்டும், கணிசமான பணமும் வழங்கப்படும். அதில், எம்பி எம்எல்ஏக்களை அழைத்து வந்தால் உங்களுக்கு ஜாக்பாட் பரிசு நிச்சயம். மேடையிலேயே உங்களுக்கு முக்கிய அறிவிப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளாராம்.
அண்ணாமலையின் எம்எல்எம் திட்டத்தை பார்த்து முதலில் அதிர்ச்சி அடைந்த மாஜிக்கள், யாரையாவது இழுத்து கட்சியில் சேர்க்க வேண்டும் என்று ஒவ்வொறு நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்களாம். அதிமுகவில் ஆள் கிடைக்கவில்லை என்றால் வேறு கட்சியில் உள்ள நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று பலரையும் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்களாம் மாஜிக்கள். அதேநேரத்தில் இதுவரை முக்கிய நிர்வாகிகள் சிக்காததால் அண்ணாமலையும் அதிர்ச்சியில் உள்ளாராம்.

The post தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடி கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்களை சேர்க்க முயற்சி? ஒருவர் கூட சிக்காததால் ‘எம்எல்எம்’ திட்டத்தை அறிவித்தார் அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,PM Modi ,Tamil Nadu ,Annamalai ,CHENNAI ,Modi ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் பாஜக அலை...