×

டிவி தொகுப்பாளரை கடத்தி அறையில் அடைத்த இளம்பெண்: திருமணம் செய்யும்படி டார்ச்சர்

திருமலை: ஐதராபாத்தில் டிவி தொகுப்பாளரை கடத்தி அறையில் அடைத்து திருமணம் செய்யும்படி டார்ச்சர் செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். தமிழ் சினிமாவில் சினேக் பாபு என்ற வேடத்தில் நடிகர் வடிவேலு நடித்த படத்தில் ‘பொண்ணுங்க எல்லாம் இப்போ ஆம்பளைங்கள கிட்னாபா? அதுவும் அழகா இருந்த உடனே கிட்னாபா?’ என நகைச்சுவையாக வசனம் பேசியிருப்பார். ஆனால் அதுபோன்ற சம்பவம் உண்மையில் நடந்துள்ளது.

தெலுங்கில் உள்ள பிரபல தனியார் டிவி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளவர் பிரணவ். இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த திரிஷா என்ற இளம்பெண் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில் செய்து பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு மார்கெட்டிங் செய்து வருகிறார். இவர் மேட்ரிமோனியில் பிரணவ் போட்டோ இருப்பதை பார்த்து காதலிக்க தொடங்கினார். அவரை திருமணம் செய்ய முடிவும் செய்தார். இதற்காக பிரணவ் செல்போன் எண்ணை சேகரித்து திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்.

ஆனால் மேட்ரிமோனி தளத்தில் தான் பதிவு செய்யவில்லை. தனது பெயர் போட்டோ பயன்படுத்தி வேறு யாரோ பதிவு செய்துள்ளதாக கூறி பிரணவ் திருமணத்திற்கு மறுத்துவிட்டார். இதனால் கடும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த திரிஷா எப்படியாவது பிரணவ்வை அடைந்தே தீர வேண்டும் என்று அவரை கடத்த திட்டம் தீட்டினார்.
அதன்படி கடந்த 10ம் தேதி டிவி நிகழ்ச்சி முடிந்து இரவில் வந்துகொண்டிருந்த பிரணவை, 5 பேர் கொண்ட கும்பலுடன் திரிஷா காரில் கடத்தி உப்பலில் பகுதியில் உள்ள ஒரு அறையில் அடைத்தார். அங்கு பிரணவை, திரிஷா ‘நான் உன்னை உண்மையாகவும், மிகவும் ஆழமாகவும், காதலித்து வருகிறேன்.

என்னை திருமணம் செய்துகொள்’ என வற்புறுத்தி உள்ளார். இந்நிலையில் மறுநாள் காலையில் திரிஷாவிடம் இருந்து தப்பித்து வந்த பிரணவ் அங்குள்ள உப்பல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் பிரணவ் பெயரில் போலி ஐடி உருவாக்கி பணம் சம்பாதிக்க சிலர் மோசடி செய்ய திட்டம் வகுத்திருந்தது தெரியவந்தது. ஆனால் அது பிரணவின் ப்ரொபைல் தான் என நம்பிய த்ரிஷா அவரை காதலித்துள்ளார். மேலும் திருமணம் செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ஒருதலை காதலால் பிரணவ்வை கடத்திச்சென்று டார்ச்சர் செய்த திரிஷாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post டிவி தொகுப்பாளரை கடத்தி அறையில் அடைத்த இளம்பெண்: திருமணம் செய்யும்படி டார்ச்சர் appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Vadivelu ,Sinek Babu ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணி அபார வெற்றி!.