×

தமிழ்நாட்டில் சில இடங்களில் கொளுத்தியது 100 டிகிரி

சென்னை: தமிழ்நாட்டில் நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக சில இடங்களில் 100 டிகிரியை தாண்டி நேற்று ெவயில் கொளுத்தியது. அடுத்த சில நாட்களுக்கு இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது பனிப்பொழிவின் தாக்கம் குறையத் தொடங்கி, பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதுடன் வெயிலும் சில இடங்களில் அதிகரித்துள்ளது. குறிப்பாக கரூரில் நேற்று 102 டிகிரி (பாரன்ஹீட்) கொளுத்தியது. அதன் தொடர்ச்சியாக அருப்புக்கோட்டை, மதுரை, சேலம், சந்தியூர், திருச்சி ஆகிய இடங்களில் 100.4 டிகிரி வெயில் நிலவியது.

மேலும், கோவையில் 99 டிகிரி, தர்மபுரி, பாளையங்கோட்டை, வேலூர் ஆகிய இடங்களில் சராசரியாக 97 டிகிரி முதல் 99 டிகிரி வரை வெயில் நிலவியது. சென்னையில் 95 டிகிரி வெயில் நிலவியது. கடல் பகுதியில் இருந்து தரைப்பகுதி நோக்கிவீசும் காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்பட்டதால், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. கரூர், மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது. சென்னை, ஈரோடு, நாகப்பட்டினம், திருச்சி, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி வரையில் வெப்பமும், சேலம், தஞ்சாவூர், மாவட்டங்களில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரையும், சென்னை நுங்கம்பாக்கம், நீலகிரி, கோவை, மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, அடுத்த சில நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

The post தமிழ்நாட்டில் சில இடங்களில் கொளுத்தியது 100 டிகிரி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Tamilnadu ,
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...