×

ஜலகண்டேஸ்வரரை சுற்றும் பவுர்ணமி ஜலவலம் தொடக்கம் திரளான பக்தர்கள் பங்கேற்பு வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டையில்

வேலூர், பிப்.24: வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரரை சுற்றி வரும் வகையில் பவுர்ணமி ஜலவலம் செல்லும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வலம் வந்து சுவாமியை வழிபட்டனர்.
வேலூர் நகரின் மையப்பகுதியில் விஜயநகர நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட பிரமாண்ட கற்கோட்டையில் உயர்ந்த ராஜகோபுரத்துடன் கூடிய அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை பொறுத்தவரை சிறிய அளவில் படவேடு சம்புவராயர்களால் கட்டப்பட்டதாகவும், அதன் பின்னர் கோட்டையை கட்டியெழுப்பிய விஜயநகர நாயக்க மன்னர்களால் பெரிய அளவில் கட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

இக்கோட்டையை சுற்றிலும் சுமார் 3 கி.மீ தூரத்துக்கு அகழி கோட்டையை சுற்றிய மணிமாலை போல அமைந்துள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அமைந்துள்ள திரு அண்ணாமலையை ஒவ்வொரு பவர்ணமி அன்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வலம் வந்து வணங்குகின்றனர். அதை தொடர்ந்து கலசப்பாக்கம் அருகில் உள்ள தென்மகாதேவமங்கலம் பர்வத மலையையும், தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் மலையையும், வந்தவாசி அருகில் உள்ள தவளகிரீஸ்வரர் வெண்குன்ற மலையையும் பக்தர்கள் வலம் வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் தற்போது வள்ளிமலையையும் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் வருகின்றனர். இந்த நிலையில் முதன்முறையாக வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரை பவுர்ணமி தோறும் வலம் வரும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதற்காக கோட்டை முன்புறம் உள்ள காந்தி சிலை அருகே இதற்கான சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் மகேஷ், பாஸ்கரன், ஜலகண்டேஸ்வரர் கோயில் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜையின் நிறைவில் பவுர்ணமி முழு நிலவுக்கு மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இந்து முன்னணியினர், பக்தர்கள் கோட்டையை சுற்றி வலம் வந்தனர். அவர்களுக்கு பாதாம்பால், பிரசாதம் ஆகியன வழங்கப்பட்டன. முடிவில் அனைவரும் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். ஜலகண்டேஸ்வரரை மையப்படுத்தி, அகழியை சுற்றி வலம் வருவதால் இதற்கு ஜலவலம் என்று பெயரிடப்பட்டுள்ளதாக பக்தர்களும், இந்து முன்னணி நிர்வாகிகளும் தெரிவித்தனர்.

The post ஜலகண்டேஸ்வரரை சுற்றும் பவுர்ணமி ஜலவலம் தொடக்கம் திரளான பக்தர்கள் பங்கேற்பு வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டையில் appeared first on Dinakaran.

Tags : Jalakandeswarar ,Vellore Fort ,Vellore ,Pournami Jalavalam ,Lord ,Vijayanagara Nayaka ,Jalavalam ,
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...