×

இந்தியா கூட்டணியில் திரிணாமுல், ஆம்ஆத்மியுடன் விரைவில் தொகுதி பங்கீடு: காங்கிரஸ் நம்பிக்கை

 

புதுடெல்லி: இந்தியா கூட்டணியில் விரைவில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவடையும் என்று காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. இந்தியா கூட்டணியில் சமாஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி முதன்முதலாக தொகுதி பங்கீட்டை முடித்து உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், சமாஜ்வாடி 63 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. மபியில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், சமாஜ்வாடி 1 தொகுதியிலும் போட்டியிடுகிறது. இந்தநிலையில் ஆம்ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளது. டெல்லியில் ஆம்ஆத்மி 4, காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் 24 தொகுதியிலும், ஆம்ஆத்மி 2 தொகுதியிலும், 10 தொகுதி கொண்ட அரியானாவில் காங்கிரஸ் 9 தொகுதியிலும், ஆம்ஆத்மி 1 தொகுதியிலும், 2 தொகுதி கொண்ட கோவாவில் இருகட்சிகளும் தலா 1 தொகுதியிலும் போட்டியிட முடிவு எடுத்துள்ளன. இதுபற்றி இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் பருச் தொகுதி வேட்பாளராக சைத்தர் வசவாவை ஆம்ஆத்மி அறிவித்து விட்டது. ஆனால் இந்ததொகுதி சோனியாவின் தனிப்பட்ட ஆலோசகராக இருந்து மறைந்த அகமது பட்டேல் தொகுதி. அங்கு அவரது மகள் அல்லது மகனை நிறுத்த ராகுல் விரும்புவதால் இதுபற்றி ஆம்ஆத்மியுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.

இதை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 42 தொகுதி கொண்ட மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு2 தொகுதிதான் ஒதுக்க முடியும் என்று முதல்வர் மம்தா தெரிவித்து விட்டார். ஆனால் குறைந்தது 8 தொகுதி கேட்கிறது காங்கிரஸ். இதனால் இழுபறி நீடிக்கிறது. தற்போது பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 14 தொகுதி கொண்ட அசாம் மாநிலத்தில் 2, 2 தொகுதி கொண்ட மேகாலயாவில் 1 தொகுதியை திரிணாமுல் கேட்கிறது. அப்படி ஒதுக்கும் பட்சத்தில் மேற்குவங்கத்தில் காங்கிரசுக்கு 6 தொகுதிகளை திரிணாமுல் ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாளில் இதுபற்றி முடிவு தெரிந்துவிடும் என்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.

* மகாராஷ்டிரா, பீகார் நிலவரம் என்ன?

80 தொகுதிகொண்ட உத்தரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக, 48 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சிவசேனா தாக்கரே பிரிவு மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி உடன்படிக்கை இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. 9 தொகுதிகளை மட்டுமே இன்னும் பங்கீடு செய்ய வேண்டி உள்ளது. பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் வெளியேறி விட்டதால் அங்குள்ள 40 தொகுதிகளை இறுதி செய்யும் பணியில் லாலு பிரசாத் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

 

The post இந்தியா கூட்டணியில் திரிணாமுல், ஆம்ஆத்மியுடன் விரைவில் தொகுதி பங்கீடு: காங்கிரஸ் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Trinamool ,Aam ,Aadmi ,Congress ,New Delhi ,Trinamool Congress ,Aam Aadmi Party ,All India ,Congress party ,Samajwadi Party ,Uttar Pradesh… ,India ,Dinakaran ,
× RELATED தேர்தல் ஆணைய அலுவலகம் முன் கைதானதால்...