×

கொலை, கொள்ளை சம்பவம் நடந்த கொடநாடு பங்களாவில் நிபுணர் குழு ஆய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதன் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதா கார் டிரைவராக இருந்த கனகராஜ் விபத்தில் உயிரிழந்த நிலையில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை நேற்று ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், சிபிசிஐடி போலீசார், அரசு வழக்கறிஞர் கனகராஜ் ஆகியோர் மற்றும் குற்றம்சாட்டபட்ட சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் ஆஜராகினர். அப்போது குற்ற சம்பவம் நடைபெற்ற இடத்தில் நீதிமன்றம், அதிகாரிகள் தலைமையிலான குழு நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என எதிர்தரப்பினர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அதற்கு அரசு தரப்பு வக்கீல்கள் சார்பில் விசாரணை மேற்கொள்ள கால அவகாசம் கேட்கப்பட்டது. மேலும், கொலை நடந்த கொடநாடு பங்களாவில் நிபுணர்கள் குழுவைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ள உத்தரவு வழங்கும்படி அரசு தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி அப்துல் காதர், கொடநாடு எஸ்டேட்டில் அதிகாரிகள் கொண்ட ஆய்வு குழு ஆய்வு மேற்கொள்ளவும் அனுமதி வழங்கி, வழக்கு விசாரணையை வரும் 8ம் தேதி தேதிக்கு ஒத்தி வைத்தார்.

* வீடியோ பதிவு செய்ய உத்தரவு

அரசு தரப்பு வக்கீல் கனகராஜ் கூறுகையில்,“கொடநாடு பங்களாவை சிபிசிஐடி போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டோம். அதை ஏற்றுக் கொண்ட மாவட்ட நீதிபதி, நிபுணர் குழு அமைத்து கொடநாடு பங்களாவை ஆய்வு செய்யலாம். அதை முழுவதுமாக வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்’’ என்றார்.

The post கொலை, கொள்ளை சம்பவம் நடந்த கொடநாடு பங்களாவில் நிபுணர் குழு ஆய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Koda Nadu bungalow ,Jayalalithaa ,Sasikala ,Kodanath, Nilgiris district ,Jayalalitha ,Koda Nadu ,Dinakaran ,
× RELATED எடப்பாடி கொடுத்த ‘சீக்ரெட் சிக்னல்’...