×

விவசாயிகள் போராட்டத்தில் பலியான பஞ்சாப் விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி: சகோதரிக்கு அரசு வேலை; பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு

சண்டிகர்: விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த பஞ்சாப் விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி தருவதாக முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தர வேண்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியானா, பஞ்சாப் உத்தரபிரதேச மாநிலத்ரதை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த சில தினங்களாக போரடத்தை நடத்தி வருகின்றனர். அதன்ஒரு பகுதியாக நேற்று முன்தினம் பஞ்சாப் – அரியானா கானவுரி எல்லையில் தடுப்புகளை மீறி போராட்டம் நடத்திய விவசாயிகளை கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகளை சுட்டு அரியானா காவல்துறையினர் கலைக்க முற்பட்டனர்.

அப்போது பஞ்சாப் மாநிலம் பதின்டா மாவட்டம் பாலோக் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்கரண் சிங்(21) பலியானார். இந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த சுப்கரண் சிங் குடும்பத்துக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நிவாரண உதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பகவந்த் மான் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “போராட்டத்தில் இளம் விவசாயி பலியான சம்பவம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. சுப்கரண் சிங் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் அளிக்கப்படும். அவரது சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும். விவசாயி மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கருப்பு நாள் அனுசரிப்பு
கானவுரி எல்லையில் இளம் விவசாயி சுப்கரண் சிங் காவல்துறை துப்பாக்கி சூட்டில் பலியானதை கண்டிக்கும் விதமாக நேற்று சம்யுக்த கிசான் மோர்ச்சா விவசாய சங்கம் சார்பாக நேற்று ஒருநாள் கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. மேலும் காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து பார்தி கிசான் யூனியன் சங்கம் சார்பாக பஞ்சாப்பின் 17 மாவட்டங்களில் உள்ள 47 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

* போராட்ட களத்தில் அரியானா விவசாயிகள்
போராட்ட களமான கானவுரி நோக்கி அரியானா மாநில விவசாயிகள் பேரணி செல்ல முயன்றனர். அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி, கலைக்க முற்பட்டனர். அப்போது காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். இதனால் அங்கு இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

* நிதி வேண்டாம் நீதி வேண்டும்
இந்நிலையில் விவசாயி மரணத்துக்கு நீதி வேண்டும் என சுப்கரண் சிங் குடும்பத்தாரும், விவசாயிகள் சங்கத்தினரும் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, “சுப்கரண் மரணத்துக்கு எங்களுக்கு அரசின் நிதி உதவி வேண்டாம். அவரது மரணத்துக்கு காரணமானவர்கள் மீது பஞ்சாப் அரசு வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை சுப்கரணின் உடலை தகனம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்துள்ளனர்.

* மேலும் ஒரு விவசாயி பலி
இதனிடையே பஞ்சாப் – அரியானா கானவுரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பதின்டா மாவட்டம் அர்கர் பகுதியை சேர்ந்த தர்ஷன் சிங்(62) என்ற விவசாயி மாரடைப்பால் உயிரிழந்தார்.

The post விவசாயிகள் போராட்டத்தில் பலியான பஞ்சாப் விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி: சகோதரிக்கு அரசு வேலை; பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Punjab ,Chief Minister ,Bhagwant Mann ,Chandigarh ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவாலை கண்டு பாரதிய ஜனதா கட்சி...