×

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த தலைமை காவலர் அதிரடி பணிநீக்கம்: மற்றொரு ஏட்டு சஸ்பெண்ட்

சென்னை: செம்பியம் காவல் நிலைய குற்றப்பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் செந்தில்குமார். கடந்த 2020ம் ஆண்டு முதல் இவர் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தன. கடந்த 2020 மே மாதம் பணியில் இருந்த இவர் திடீரென்று 2 நாட்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மாயமானார். மேலும் கடந்த 2020 ஜூன் மாதம் மாம்பலம் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. திருமணமான இவர் மனைவியுடன் வசிக்காமல் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் பல குற்றச்சாட்டுகளில் சிக்கிய செந்தில்குமார் செம்பியம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். கடந்த ஆண்டு கொலை வழக்கில் செந்தில்குமாருக்கு தொடர்பு இருந்தது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக இவரை கடந்த ஆண்டு புளியந்தோப்பு துணை கமிஷனர் சஸ்பெண்ட் செய்தார். அதன் பிறகு தமிழ்நாடு காவல் சார்பு நிலை ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு விதிகளின்படி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் செந்தில்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது நிரூபணம் ஆனதால், புளியந்தோப்பு காவல் மாவட்ட துணை ஆணையர் செந்தில்குமாரை காவலர் பணியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுபோல, புளியந்தோப்பு பகுதியை சேர்ந்து பெண், தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என ஓட்டேரி காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார். அதன் பிறகு வாகனம் புதுப்பேட்டையில் இருப்பதை அறிந்து, ஓட்டேரி தலைமை காவலர் வேல்முருகனை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தை மீட்டுள்ளார். வேல்முருகன் இரு சக்கர வாகனம் காணாமல் போனது குறித்து எப்ஐஆர் போடப்பட்டுள்ளதால், வாகனத்தை நீதிமன்றத்தில் ஒப்படைத்து அதன் பிறகு தான் தங்களிடம் தர முடியும் எனக் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வேல்முருகன் அந்த பெண்ணிடம் மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் துணை கமிஷனர் ஈஸ்வரன் வேல்முருகனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

The post தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த தலைமை காவலர் அதிரடி பணிநீக்கம்: மற்றொரு ஏட்டு சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Senthilkumar ,Sempiyam ,
× RELATED புழல் பகுதியில் பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர்: போக்குவரத்து நெரிசல்