×

அறுவடை சீசன் தொடங்கியுள்ளதால் களக்காட்டில் வாழைத்தார் சந்தை திறப்பு எப்போது?: விவசாயிகள் எதிர்பார்ப்பு

களக்காடு: அறுவடை சீசன் தொடங்கி உள்ளதால், களக்காட்டில் வாழைத்தார் சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள களக்காடு பகுதியின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். களக்காடு பகுதியில் விளையும் வாழைத்தார்களுக்கு மவுசு அதிகம். கேரள சந்தைகளில் களக்காடு வாழைத்தார்களுக்கு தனி கிராக்கி உள்ளது. இதனால் விவசாயிகள் நெல் சாகுபடி செய்வதை விட வாழைகள் பயிர் செய்வதையே அதிகம் விரும்புகின்றனர்.

இங்கு விளையும் ஏத்தன் ரக வாழைத்தார்கள் சிப்ஸ் உள்ளிட்ட தின்பண்டங்கள் செய்ய வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் களக்காடு, மாவடி, மலையடிபுதூர் திருக்குறுங்குடி சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழைகள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. ஏத்தன், ரசகதலி, கதலி, செந்தொழுவன் நாடு உள்ளிட்ட ரகங்கள் பயிர் செய்யப்படுவது வாடிக்கையாகும். வாழைத்தார் அறுவடை தொடங்கியதும் வியாபாரிகள் வயல்களுக்கு வந்தே எடை போட்டு வாழைத்தார்களை கொள்முதல் செய்வார்கள். சீசன் தொடங்கும் போது ஏத்தன் ரக வாழைத்தார் 1 கிலோ ரூ.40 வரை விற்பனை ஆகும்.

அதிக லாபம் இல்லை என்றாலும், நஷ்டம் இல்லை என்ற நிலையில் விவசாயிகள் திருப்தியுடன் வாழைத்தார்களை விற்பனை செய்வார்கள். ஆனால் அடுத்த 10 நாட்களில் இருந்தே வாழைத்தார் விலை இறங்குமுகமாகி விடும். படிப்படியாக விலை குறைந்து ரூ.10க்கும் குறைவாக விற்பனையாகும். இந்த விலை விவசாயிகளுக்கு போதுமானதாக இருப்பதில்லை. வாழைத்தார்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவது தொடர் கதையாகி விட்டது. ஒரு வாழைத்தாருக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் இருந்து, உரமிடுவது, மருந்து தெளிப்பது, கம்பு கொடுத்து பாதுகாப்பது வரை ரூ.200 வரை செலவு செய்யப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

ஆனால் செலவழித்தை விட மிகவும் குறைவாக ரூ.100க்கும் குறைவாக கிடைப்பதால் விவசாயிகளுக்கு செலவழித்த ரூபாய் கூட கிடைக்காத நிலை நிலவுகிறது. இதையடுத்து ஆண்டுதோறும் வாழை விவசாயிகள் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வாக களக்காட்டில் வாழைத்தார் சந்தை அமைத்து, அரசே நேரடியாக வாழைத்தார்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், அறுவடை காலத்தில் வாழைத்தார்களை சேமித்து வைக்க குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நெல்லையில் நடந்த விழாவில் களக்காட்டில் வாழைச்சார் சந்தை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி களக்காடு அருகே படலையார்குளம் பஞ்சாயத்துக்குட்பட்ட ஜெ.ஜெ.நகரில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிக துறை சார்பில் ரூ.6.25 கோடி மதிப்பில் வாழைத்தார் ஏல மையம் மற்றும் மதிப்பு கூட்டு மைய கட்டுமான பணிகள் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சந்தை கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது, தற்போது கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனிடையே களக்காடு பகுதியில் வாழைத்தார் அறுவடையும் தொடங்கி உள்ளது, எனவே உடனடியாக வாழைத்தார் சந்தையை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

The post அறுவடை சீசன் தொடங்கியுள்ளதால் களக்காட்டில் வாழைத்தார் சந்தை திறப்பு எப்போது?: விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Fallow ,Nella District ,Kalakkad ,West Continuum Hill ,Dinakaran ,
× RELATED தமிழக பள்ளிகளில் சாதி வேறுபாடு...