×

மணப்பாறை அடுத்த பெரியகுளத்துப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 750 காளைகள்

*23 வீரர்கள் காயம்

மணப்பாறை : மணப்பாறை அடுத்த பெரியகுளத்துப்பட்டி புனித ஆரோக்கிய மாதாகோயில் முன் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகள் பங்கேற்றன. 325 காளையர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியின்போது மாடுகள் பாய்ந்ததில் வீரர்கள், உரிமையாளர்கள் 23 பேர் காயமடைந்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பெரியகுளத்துப்பட்டி புனிதஆரோக்கிய மாதாகோயில் முன் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் இருந்து 750க்கு மேற்கட்ட காளைகளை அதன் உரிமையாளர்கள் லோடு வேன்களில் ஏற்றி கொண்டு வந்தனர். அதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 325 மாடுபிடி வீரர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொண்டனர். மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவகுழு மூலம் பரிசோதனை நடைபெற்றது. அதேபோல் கால்நடை மருத்துவர்கள் மூலம் காளைகளுக்கு பரிசோதனை செய்து அனுமதி வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து நேற்று காலை 9 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முதலில் கோவில் காளைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அடுத்து மற்ற மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த வந்தது. காளையர்கள் 25 பேர் கொண்ட குழுவாக வாடிவாசலில் நின்று காளைகளின் திமிலை பிடித்து அடக்கினர். சில காளைகள் தொட்டுக் கூட பார்க்க முடியாத அளவிற்கு காளையர்களை புரட்டி எடுத்தது.

மேலும் சில காளையர்கள் காளையை அடக்கி பரிசுகளை பெற்றுச் சென்றனர். போட்டியில் காளையை அடக்கிய வீரர் மற்றும் காளையர்களிடம் சிக்காத காளைகளுக்கும் சைக்கிள், டேபிள், சேர்,பேன், வெள்ளி காசு,ரொக்கப் பணம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது. இப்போட்டியில் பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள், வீரர்கள் என 23 பேர் காயமடைந்தனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி பாதுகாப்பு பணியில் மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் தலைமையில் 175க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வையம்பட்டி தீயணைப்புத்துறையினர், 108 அவசர ஊர்திகள் ஆகியவை பாதுகாப்பிற்காக தயார் நிலையில் நின்றன.ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

The post மணப்பாறை அடுத்த பெரியகுளத்துப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 750 காளைகள் appeared first on Dinakaran.

Tags : bulls ,Jallikattu ,Periyakulathupatti ,Manaparai ,Periyakulathupatti St. 325 Kalaiyars ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகள் அமலில்...