×

மணமேல்குடி அருகே ஆய்வுக்கு சென்ற அதிகாரி மீது படகை மோதவிட்டு தாக்குதல்

*இழப்பீடு வழங்க கோரி சாலைமறியல்

அறந்தாங்கி : நாட்டுப்படகில் ஆய்வுக்கு சென்ற மீன்வளத்துறை அதிகாரி மீது விசைப்படகை கொண்டு தாக்குதல் நடத்தியதற்கு இழப்பீடு கேட்டு நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே பொன்னகரம் மீனவ கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் உள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றுமுன் தினம் இரவு கோட்டைப்பட்டிணம் விசைப்படகு மீனவர்கள் தங்கள் பகுதியில் அரிவலை, மிக்சர்மடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடித்ததாக கூறப்படுபடுகிறது.
இதைப் பார்த்த பொன்னகரம் நாட்டுப்படகு மீனவர்கள் சிலர் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின்பேரில் நேற்றுமுன் தினம் இரவு மீன்வளத்துறை சரக ஆய்வாளர் கனகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்களுடன் சம்பவ இடத்திற்கு இரண்டு நாட்டுப்படகுகளுடன் கடலுக்குச் சென்றனர். அப்போது விசைப்படகில் அங்கு மீன்பிடித்த கோட்டைப்பட்டினம் மீனவர்களை மீன்வளத்துறை அதிகாரி கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தி உள்ளார்.

அப்போது விசைபடகு மீனவர்கள். விசைப்படகை கொண்டு மீன்வளத்துறை அதிகாரிகள் வந்த படகை நோக்கி அதிபயங்கரமாக மோதி உள்ளனர். விசைப்படு மோதியதில் நாட்டுப்படகு உடைந்து அதில் இருந்த மீன்வளத்துறை சரக ஆய்வாளர் கனகராஜ் கடலில் விழுந்து தத்தளித்த நிலையில் உயிருக்கு போராடி உள்ளார். இதையடுத்து மற்றொரு படகில் வந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் தத்தளித்த மீன்வளத்துறை அதிகாரி கனகராஜை மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், சேதமடைந்த நாட்டுப்படகிற்கு நிவாரணம் வழங்க வேண்டும். நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாரத்தை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரியும், கிழக்கு கடற்கரை சாலையில் பொன்னகரம் மீனவர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா மற்றும் கோட்டைப்பட்டினம் காவல்துணை கண்காணிப்பாளர் கௌதம் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, சேதமடைந்த நாட்டுப்படகிற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டனர்.
இந்த சம்பவத்தால் மணமேல்குடி கிழக்கு கடல்கரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

The post மணமேல்குடி அருகே ஆய்வுக்கு சென்ற அதிகாரி மீது படகை மோதவிட்டு தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Mamelgudi ,Fisheries Department ,Mamaelgudi ,Puthukkottai ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...