×

தமிழக – இலங்கை மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை

சென்னை: தமிழக – இலங்கை மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். பாக் நீரிணைப்பகுதியில் பன்னாட்டு கடல் எல்லையானது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மிகவும் குறுகியதாக உள்ளது. பாக்வளைகுடா பகுதியில் குறிப்பாக இராமநாதபுரம் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சார்ந்த மீனவர்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் போது, அவர்களது படகு இயற்கை சீற்றம் மற்றும் இயந்திர கோளாறு போன்ற காரணங்களினால் பன்னாட்டு எல்லைக்கோட்டினைக் கடந்து செல்ல நேர்கிறது. இந்நேர்வுகளில், தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலுக்கும் கைதுக்கும் உள்ளாகின்றனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் துன்புறுத்தப்படும்போதும் கைது செய்யப்படும்போதும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி மாண்புமிகு ஒன்றிய பிரதமர் மற்றும் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஆகியோரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இவ்வாறான தாக்குதல் மற்றும் கைது சம்பவங்களில், ஒன்றிய அரசு தலையிட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுதலை செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இலங்கை அரசு மீனவர்களை மட்டும் அவ்வப்போது விடுவித்துவிட்டு, படகுகளை நாட்டுடமையாக்கும் செயல்களை தொடர்ந்து செய்து வருகின்றது. படகுகளை பறிகொடுத்த மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும்துயரத்திற்கு உள்ளாகின்றனர்.

தற்போதுவரை, இலங்கை சிறையில் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் 49 மீனவர்களும் 151 மீன்பிடி படகுகளும் உள்ளன. சிறைபிடிக்கப்பட்ட 151 படகுகளில் 12 படகுகள் இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளது. இதில் மீட்கும் நிலையில் உள்ள 10 படகுகளையும் மீட்டு தமிழகம் கொண்டுவர மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த அக்டோபர் 2023 அன்றே நிதி ஒதுக்கி மீட்புக்குழு அமைத்து ஆணையிட்டார்கள். ஆனாலும், ஒன்றிய அரசானது தமிழ்நாட்டின் மீட்புக்குழு இலங்கைக்கு சென்று விடுதலை செய்யப்பட்ட படகுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனுமதியை இன்றுவரை வழங்கவில்லை.

அதேபோல, தமிழக – இலங்கை மீனவர்களுக்கிடேயேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்பொருட்டு நடத்தப்படும் இந்திய-இலங்கை கூட்டுப்பணிக்குழு கூட்டம் (Indo – Srilankan Joint working committee meeting) 25/03/2022 க்கு பின்னர் இதுவரை நடைபெறவில்லை. இந்த கூட்டத்தை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள ஒன்றிய அரசை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும், தமிழ்நாடு மீனவர் பிரச்சனையில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்கள் என்று கருதாமல் பாராமுகமாகவே செயல்பட்டு வருகிறது.

அரசியல் காரணங்களுக்காக மீனவர்களை ஏமாற்றும் நோக்கத்தில் ஒன்றிய அமைச்சர்கள் அவ்வப்போது இராமேஸ்வரம் பகுதிகளுக்கு சென்று மீனவர்களை சந்தித்து இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்டுத்தருவோம் என்று வாக்குறுதி தருவதும், பாரதிய ஜனதா கட்சியினர் மீனவ பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்திக்க வைப்பதும் அவ்வப்போது நடந்து வருகிறது. ஆனால், சிறைபிடிக்கப்பட்டு இலங்கையில் உள்ள படகுகளை மீட்பதற்கு எந்தவொரு திடமான நடவடிக்கையும் ஒன்றிய அரசால் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை.

தமிழ்நாடு முதலமைச்சர் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த 152 மீன்பிடி படகுகளுக்கு ரூ.6.84 கோடி நிவாரணமாக வழங்கி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துள்ளார்கள். எனவே, தமிழ்நாட்டு மீனவர்களின் மேல் அக்கறை இல்லாத ஒன்றிய அரசு மேலும் காலம் தாழ்த்தாமல் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிப்பதற்கும் இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு மீட்கும் நிலையில் உள்ள 10 படகுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அமைக்கப்பட்ட மீட்புக்குழு இலங்கை செல்ல உடனடியாக அனுமதியும் வழங்க வேண்டும். அதேபோல, இந்திய – இலங்கை கடற்பகுதியில் இருநாட்டு மீனவர்களும் அச்சமின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபட நெடுங்காலமாக நடத்தப்படாமல் இருக்கும் இந்திய-இலங்கை கூட்டுப்பணிக்குழு கூட்டத்தையும் உடனடியாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

The post தமிழக – இலங்கை மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Minister ,Anitha Radhakrishnan ,Tamil Nadu ,Chennai ,Fisheries ,Fishermen's Welfare and ,Animal ,Husbandry ,India ,Sri Lanka ,Pak Strait.… ,Anita Radhakrishnan ,
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...