×

விஜயவாடாவில் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் 5 ஆண்டுகளில் வழங்கிய வேலைவாய்ப்பு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

*முதல்வர் ஜெகன்மோகனுக்கு ஷர்மிளா சவால்

திருமலை : விஜயவாடாவில் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஷர்மிளா, ‘5 ஆண்டுகளில் எத்தனை வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’ என்று முதல்வர் ஜெகன்மோகனுக்கு ஷர்மிளா சவால் விடுத்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியில் இளைஞர்களுக்கு எவ்வித வேலைவாய்ப்பும் வழங்கவில்லை என்பதை கண்டித்து, வேலையில்லாத இளைஞர்களுடன் நேற்று காலை விஜயவாடாவில் உள்ள தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாக அம்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காங்கிரஸ் கட்சியினர், இளைஞர்களுடன் நேற்று விஜயவாடாவிற்கு புறப்பட தயாராகினர். இதையறிந்த போலீசார், காங்கிரஸ் நிர்வாகிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களை கைது செய்து வீட்டு காவலில் வைத்தனர்.

இந்நிலையில் தடையை மீறி நேற்று காலை காங்கிரஸ் கட்சியினர் விஜயவாடாவுக்கு புறப்பட்டனர். அவர்களையும் போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இருப்பினும் சில இடங்களில் இருந்து வந்து தடையை மீறி இளைஞர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் இன்றைய முற்றுகை போராட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஷர்மிளாவும் பங்கேற்க இருந்தார். இதனால் அவரையும் போலீசார் கைது செய்ய நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே காத்திருந்தனர்.

இதையறிந்த ஷர்மிளா, நேற்றுமுன்தினம் இரவு தனது வீட்டிற்கு செல்லாமல் விஜயவாடாவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான ஆந்திர ரத்னா பவனில் தங்கினார். அங்கேயே படுத்து தூங்கினார்.இதையடுத்து ஷர்மிளா கட்சி அலுலகத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு செல்ல இருந்த நிலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் சாலையில் அமர்ந்து ஷர்மிளா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது சர்மிளா பேசியதாவது: ஆந்திராவை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய பிரச்சனை வேலையில்லா திட்டாட்டம். டிகிரி, பிஜி படித்த பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆந்திராவில் போதிய வேலை இல்லாததால் 21,000 பேர் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இவை உண்மையில் தற்கொலையா அல்லது கொலையா? ஆண்டுதோறும் டிகிரி, பிஜி படித்த 500 பிள்ளைகள் செத்து மடிகிறார்கள் என்றால், சிறப்பு அந்தஸ்து கிடைக்காமல் செய்தது நாமே நம் கையால் செய்த பாவமா? இங்குள்ள பிள்ளைகள் புலம் பெயர்ந்து இளைஞர்கள் இல்லாத மாநிலமாக மாறும் சூழல் ஏற்படும். 2 கோடி வேலை வழங்கப்படும் என கூறிய மத்திய அரசு குறைந்தது ஒரு லட்சம் பேருக்கு வேலை கொடுத்தார்களா ?

இது ஆந்திராவை சேர்ந்த இளைஞர்களை பாஜக அரசு வஞ்சித்தது போல் இல்லையா? 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த சந்திரபாபு 1 லட்சத்து 43 ஆயிரம் வேலைகளை பணி நியமனம் செய்யாமல் நிலுவையில் வைத்தார். அதன்பிறகு 2 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார் ஜெகன் எத்தனை வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வழங்கியுள்ளீர்கள்? அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதை கூட தடுப்பது எவ்வளவு அநியாயம்.

கடந்த இரண்டு நாட்களாக போலீசார் உஷார்படுத்தப்பட்டு எங்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். நீங்கள் உண்மையிலேயே நேர்மையானவராக இருந்தால் எங்கள் போராட்டத்தை ஏன் கட்டுப்படுத்த வேண்டும். இது நீங்கள் தவறு செய்கிறீர்களா என்பது தானே அர்த்தம். 23 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மெகா டி.எஸ்.சி. அறிவிப்பு வெளியிடப்படும் எனக்கூறி 5 வருடங்கள் ஆகிவிட்டன. ஆட்சிக்கு வந்து என்ன செய்தீர்கள்? ஒரு நாள் கூட சிறப்பு அந்தஸ்து கேட்டு போராடினீர்களா? வேலைகள், தொழில்கள் வரவில்லை.

இந்த ஐந்து வருடங்கள் என்ன செய்தீர்கள்? தற்போது தேர்தல் முன்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிஎஸ்சிக்கு குறைந்தது 150 புத்தகங்கள் படிக்க வேண்டும். காலக்கெடு 26 நாட்கள் மட்டுமே. எங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறது என்று இளைஞர்கள் கூறுகிறார்கள். 6 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக ஜெகனண்ணா கூறுகிறார். அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த வேலைகளும் இதில் அடங்கும்.

6 ஆயிரம் வேலை வாய்ப்புகளுக்கு அறிவிப்பு வெளியிட்ட ஜெகனுக்கு பதிலாக 7 ஆயிரம் வேலை வாய்ப்புகளை வழங்கிய சந்திரபாபு உங்களை விட சிறந்தவர்? இந்த 5 ஆண்டுகளில் எத்தனை பணியிடங்களை நிரப்பியுள்ளீர்கள் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 30 ஆயிரம் வேலை வாய்ப்புகளுடன் கூடிய மெகா டிஎஸ்சி அறிவிப்பு வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

The post விஜயவாடாவில் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் 5 ஆண்டுகளில் வழங்கிய வேலைவாய்ப்பு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Vijayawada ,Sharmila Shaval ,Jekanmohan ,Congress party ,Sharmila ,Jeganmohan Marmila ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...