×

மாநகராட்சி பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள் பாராட்டு

சென்னை, பிப்.23: சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது கவுன்சிலர்கள் பேசியதாவது: 7வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் (அதிமுக): பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. யுகேஜி முடிக்கும் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து தொடக்க பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி இல்லை, அனைத்து தொடக்க பள்ளிகளிலும் அதை ஏற்படுத்த வேண்டும். கத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் 10 படுக்கைகளுடன் மேம்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. எண்ணூரில் தொழிற்சாலைகள அதிகம் உள்ளதால் அவசர சிகிச்சை மருத்துவமனை ஏற்படுத்த வேண்டும்.

134வது வார்டு கவுன்சிலர் உமா ஆனந்தன் (பாஜ): எதிர்க்கட்சி என்பதால் பட்ஜெட்டில் உள்ள குறைகளை கூறுகிறேன் என நினைக்க வேண்டாம். பட்ஜெட்டில் உள்ள சிறப்பம்சங்கள இங்கே பலர் பேசி விட்டனர். அதனால் எனக்கு தோன்றிய ஒரு சில சந்தேகங்கள், கோரிக்கைகளை மட்டும் கூறுகிறேன். சென்னை பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும். மாட்டு தொழுவங்களுக்கு உரிமம் வழங்குவதாக அறிவித்துள்ளீர்கள், அதனால் தனியார் கோ சாலைகளுக்கு ஏதாவது பிரச்னை வருமா? எனது வார்டில் கூட்ட நெரிசல் மிக்க சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் என்னுடைய கோரிக்கையை ஏற்று பொருத்தப்பட்டது. ஆனால் எங்கு பொருத்த வேண்டும் என்பது குறித்து கவுன்சிலர்களிடம் கேட்கவில்லை.

ஆணையர் ராதாகிருஷ்ணன்: மாட்டு தொழுவங்களுக்கு உரிமம் வழங்குவது என்பது பாதுகாப்பு நடைமுறை மட்டுமே. தனியார் கோ சாலைகளுக்கு எந்த பிரச்னையும் வராது.

84வது வார்டு கவுன்சிலர் ஜான் (அதிமுக): அம்மா உணவகங்களில் மிக்சி, கிரைண்டர் போன்ற உபகரணங்கள் பழுதடைந்து சீர் செய்யப்படாமல் உள்ளது. அதை சரி செய்ய வேண்டும். அதற்காக கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். பெண் பிள்ளைகளுக்கு நாப்கின் வழங்க வேண்டும், அதை எரியூட்ட இயந்திரமும் அனைத்து பள்ளிகளில் அமைக்க வேண்டும்.

148வது வார்டு கவுன்சிலர் கிரிதரன் (அமமுக): பள்ளி மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் வரவேற்புக்குரியது. பட்ஜெட்டில் வரவேற்புக்குரிய பல்வேறு அறிவிப்புகள் உள்ளன. மண்டலத்திற்கு ஒரு போதை மறுவாழ்வு மையம் ஏற்படுத்த வேண்டும். பல்வேறு அறிவிப்புகள் நடைமுறைப்படுத்த வில்லை, சைதாப்பேட்டையில் மாதிரி பள்ளி இன்னும் வரவில்லை என்றார். அப்போது மண்டலக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி மாதிரி பள்ளி தமிழக அரசு கட்டுப்பாட்டில் வரும். அது தெரியாமல் உறுப்பினர் பேசுகிறார். சைதாப்பேட்டையில் மண்டல குழு, நிலைக் குழு தலைவர், துணை மேயர் இருக்கிறார்கள். அங்கு எப்படி திட்டம் செயல்படுத்தப்படாமல் இருக்கும் என்றார். மேலும் திமுக கவுன்சிலர்கள், அமமுக கவுன்சிலர் தவறான தகவல் கூறுவதாக விமர்சனம் செய்தனர். இதனால் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது. அப்போது, மேயர் பிரியா கவுன்சிலர்களை அமைதியாக இருக்கும்படி கூறினார்.

மேயர் பிரியா: அதிமுக, அமமுக உறுப்பினர்கள் கடந்த பட்ஜெட் அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை என கூறுகின்றனர். ஆனால் அனைத்து அறிவிப்புகளும் நடைமுறையில் தான் உள்ளது. மாணவிகளுக்கு அனைத்து பள்ளிகளிலும் நாப்கின் வழங்கப்படுகிற்து. ஒரு சில இடங்களில் மட்டுமே எரியூட்டும் இயந்திரம் உள்ளது. அவற்றை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பட்ஜெட் சிறப்பாக உள்ளது: -பாஜ கவுன்சிலர்
பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பாஜ கவுன்சிலர் உமா ஆனந்தன், பட்ஜெட் சிறப்பாக உள்ளது. ஆனால் நீங்கள் கூறியது போல நான் திராவிட மாடல் போன்ற வார்த்தைகளை சொல்லமாட்டேன் என கூறினார். அப்போது திமுக கவுன்சிலர்கள் இப்போது நீங்கள் கூறிவிட்டீர்களே என பதிலளித்தனர். பின்னர் உமா ஆனந்தன் அனைத்தையும் உள்ளடக்கிய பட்ஜெட்டாக இது உள்ளது. பாராட்டுக்குரிய அம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளது என்றார். அப்போது துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி பட்ஜெட்டை பாஜ கவுன்சிலரே பாராட்டி விட்டார் என கூறினார்.

The post மாநகராட்சி பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Corporation ,7th Ward Councilor ,Karthik ,AIADMK ,Dinakaran ,
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...