×

டாரஸ் லாரிகளை கட்டுப்படுத்த குமரி – நெல்லை எல்லையில் சிறப்பு சோதனை சாவடிகள்: இரு மாவட்ட போலீஸ் கண்காணிப்பு

நாகர்கோவில்: டாரஸ் லாரிகள் வருகையை கட்டுப்படுத்த குமரி – நெல்லை எல்லையில் சிறப்பு சோதனைசாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. இரு மாவட்ட போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு செல்லும் லாரிகளால் தொடர் விபத்துக்களும், உயிர் பலிகளும் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் எஸ்.எஸ்.ஐ. ஜஸ்டின், தாணுமூர்த்தி, அனிதா , பீனா ஆகிய 4 பேர் இறந்தனர். அடுத்தடுத்து உயிரிழப்புகள் நிகழ்ந்ததால் குமரி மாவட்டத்துக்குள் லாரிகள் வந்து செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கடந்த 20ம் தேதி முதல் அமுலுக்கு வந்தன.

அதன்படி கனிம வள சரக்கு காலி வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். கனிம வளங்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் மாவட்டத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக வேகம், மது போதையில் வாகனம் ஓட்டுபவர் மீதும், அவரை அனுமதிக்கும் உரிமையாளர் மீதும் மோட்டார் வாகன சட்டம், இந்திய தண்டனைச் சட்டத்தின் படி வாகனங்களை கைப்பற்றி தேவைப்படின் சிறை நடவடிக்கை எடுக்கவும், கனிமவளத்துறையால் வழங்கப்படும் அனுமதிச்சீட்டை முறையாக பயன்படுத்தாத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

புதிய உத்தரவுகள் அமுலுக்கு வந்த நாளில் இருந்து எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவின் பேரில் சோதனை சாவடிகளில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் டாரஸ் லாரிகள் அனுமதிக்கப்பட வில்லை. மேலும் சோதனை சாவடிகளில் ப்ரீத் அனலைசர் மூலம் டிரைவர்கள் குடிபோதையில் உள்ளார்களா? வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள், அனுமதி சீட்டு உள்ளதா? என்றும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது குமரி – நெல்லை எல்லையோர பகுதியில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. குமரி – நெல்லை எல்லையோர பகுதிகளான காவல்கிணறு, விசுவாசபுரம், நான்கு வழிச்சாலை விலக்கு பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் நெல்லை மாவட்டத்தையொட்டி உள்ளதால் நெல்லை மாவட்ட இன்ஸ்பெக்டர்கள் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரு மாவட்ட போலீசாரும் இணைந்து தீவிரமாக டாரஸ் லாரிகளை கண்காணிக்கிறார்கள். அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் டாரஸ் லாரிகள் குமரி மாவட்டத்துக்குள் நுழைந்தால் கடும் நடவடிக்கை என எஸ்.பி. சுந்தரவதனம் எச்சரித்துள்ளார்.

The post டாரஸ் லாரிகளை கட்டுப்படுத்த குமரி – நெல்லை எல்லையில் சிறப்பு சோதனை சாவடிகள்: இரு மாவட்ட போலீஸ் கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Kumari-Nellai border ,Nagercoil ,Taurus ,Kumari district ,Kerala ,Dinakaran ,
× RELATED ரிஷபம்