×

செம்பட்டி அருகே கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை

நிலக்கேட்டை: செம்பட்டி அருகே, தனியார் தோட்டக்கலைக் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவி இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த, பழனி சாலையில் தனியார் தோட்டக்கலை கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், கல்லூரியில் ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடியைச் சேர்ந்த காளி நித்தியா (21) என்ற மாணவி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது சொந்த ஊருக்கு சென்ற மாணவி, மீண்டும் கல்லூரி விடுதிக்கு வந்துள்ளார். இவரது அறையில் 3 மாணவிகள் தங்கி உள்ளனர். இந்நிலையில், காளி நித்தியா இன்று காலை 7 மணி வரை சகமாணவியுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். பின்னர் கல்லூரி விடுதி கழிவறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாக வெளியே வராததால், சந்தேகம் அடைந்த சகமாணவிகள் விடுதி பெண் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விடுதி பெண் கண்காணிப்பாளர், செம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த, ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., முருகேசன், செம்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் கழிவறையை உடைத்து சென்று பார்த்தபோது, அங்கு காளி நிதியா தூக்கிட்டு தற்கொலை செய்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செம்பட்டி அருகே கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Sembatti ,Nilakkett ,Sempatti ,Palani Road ,Sembatti, Dindigul district ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் பரபரப்பு!:...