×

4வது டெஸ்ட் ராஞ்சியில் நாளை தொடக்கம்; ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா: நெருக்கடியில் களம் இறங்கும் இங்கிலாந்து

ராஞ்சி: இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்ற நிலையில் 2 மற்றும் 3வது டெஸ்ட்டில் இந்தியா வெற்றிபெற்று 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 4வது டெஸ்ட் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா களம் இறங்குகிறது. பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் 2 இரட்டை சதம், ஒரு அரைசதம் என 545 ரன் குவித்து சூப்பர் பார்மில் உள்ளார். கில் 285, ரோகித்சர்மா 240 ரன் அடித்துள்ளனர்.

ரஜத்படிதார் 4 இன்னிங்சில் 46 ரன் மட்டுமே எடுத்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் அறிமுக வீரராக இடம்பெறக்கூடும். பவுலிங்கில் பும்ரா இல்லாத நிலையில் முகேஷ்குமார் அல்லது அறிமுக வீரராக ஆகாஷ்தீப் சேர்க்கப்படலாம். ஜடேஜா பேட்டிங்கில் 201 ரன் அடித்துள்ளதுடன் 12 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார். ராஞ்சி மைதானம் சுழலுக்கு சாதகமாக இருப்பதால் ரஜத்படிதாருக்கு பதிலாக ஒருவேளை அக்சர்பட்டேல் களம் இறங்கவும் வாய்ப்பு உள்ளது. இளம் வீரர்களை அதிகம் கொண்ட இந்தியா ஹாட்ரிக் வெற்றியை எதிர் நோக்கி உள்ளது.

மறுபுறம் இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட்டில் வென்றாலும் அடுத்த 2 போட்டியில் தோல்வியால் நெருக்கடியில் உள்ளது. பேட்டிங்கில் பென் டக்கர் 288, ஒல்லிபோப் 285, ஜாக்கிராலி 226 ரன் அடித்து வலுசேர்த்தாலும் மிடில் ஆர்டரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோரூட் 77, ஜானி பேர்ஸ்டோ 102 ரன் மட்டுமே எடுத்துள்ளனர். கேப்டன் பென் ஸ்டோக்ஸ்சும் ஒரு அரைசதத்துடன் 190 ரன்னே எடுத்துள்ளார். பவுலிங்கில் டாம் ஹார்ட்லி முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் எடுத்தாலும் அடுத்த 2 போட்டியிலும் 7 விக்கெட்டே எடுத்தார்.

இதனால் பவுலிங்கில் ஒருசில மாற்றங்கள் இருக்கும். வேகத்தில் ஆண்டர்சனுக்கு பதிலாக ஒல்லி ராபின்சன், மார்க் வுட்டுக்கு பதில் கஸ் அட்கின்சனும், சுழலில் ஹார்ட்லிக்கு பதில் சோயப் பஷீரும் இடம்பெறலாம். மேலும் முதல் 3 டெஸ்டிலும் பந்துவீசாத பென் ஸ்டோக்சும் பவுலிங் பயிற்சியை மேற்கொண்ட நிலையில் இந்த டெஸ்ட்டில் அவர் பந்துவீசுவார் என தெரிகிறது. இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றி மற்றும் தொடரை வெல்லும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடவேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து களம் இறங்குகிறது.

135வது முறையாக மோதல்: டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் நாளை 135வது முறையாக மோதுகின்றன. இதற்கு முன்ஆடிய 134 போட்டியில் இந்தியா 33, இங்கிலாந்து 51ல் வென்றுள்ளது. 50 டெஸ்ட் டிராவில் முடிந்திருக்கிறது.

ராஞ்சி பிட்ச் ரிப்போர்ட்: ராஞ்சி ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க மைதானத்தில் இதற்கு முன் 2 டெஸ்ட் போட்டி மட்டுமே நடந்துள்ளது. இதில் 2017ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2019ல் தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 202 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் ரோகித்சர்மா 212 ரன் விளாசியது குறிப்பிடத்தக்கது. ஜடேஜா 2 டெஸ்ட்டில் 12 விக்கெட் வீழ்த்தி டாப்பில் உள்ளார். இந்த ஆடுகளம் முதல் 2 நாட்கள் பேட்டிங்கிற்கு சாதகமாகவும், கடைசி 3 நாள் பவுலர்களுக்கு அனுகூலமாகவும் இருக்கும். இதனிடையே இந்த டெஸ்ட்டில் கடைசி 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 3 மற்றும் 5வது நாளில் 75 சதவீதம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 4வது டெஸ்ட் ராஞ்சியில் நாளை தொடக்கம்; ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா: நெருக்கடியில் களம் இறங்கும் இங்கிலாந்து appeared first on Dinakaran.

Tags : Ranchi ,India ,England ,Jharkhand ,Dinakaran ,
× RELATED நிலமோசடி வழக்கு ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி மதிப்புள்ள நிலம் பறிமுதல்