×

தமிழ்நாடு ஒப்புதலின்றி மேகதாதுவில் அணை கட்ட முடியாது: சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

சென்னை: தமிழ்நாடு ஒப்புதலின்றி மேகதாதுவில் அணை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். காவிரி நீர் பிரச்சினையில், காவிரி நடுவர் மன்ற பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டதா?. காவிரி ஆணைய கூட்டத்தில் தந்திரமாக மேகதாது விவகாரம் பேசப்பட்டுள்ளது. மேகதாது குறித்து பேசப்பட்ட காவிரி ஆணைய கூட்டத்தில் கலந்துகொண்டது ஏன்?. மேகதாது விவகாரத்தில், சட்டமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தமிழக அரசு அலட்சியமாக இருப்பதால், கர்நாடகா அரசு நினைப்பது போல் மேகதாதுவில் அணை கட்டி விடும். மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற வேண்டும். என்று கேட்டுக் கொண்டார். கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்; காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பே இறுதியானது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நீண்டகாலம் தலைவரே நியமிக்கப்படாமல் இருந்தது. தமிழ்நாடு – கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீட்டில் பிரச்சனை ஏற்பட்டால் அது பற்றி விவாதிக்கவே காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆணையமே கூடாததால் அதிமுக ஆட்சியில் பிரச்சனை வரவில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தில் கடந்த 11-ம் தேதி நடந்த கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தமிழ்நாடு அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறியே காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது குறித்து விவாதித்தது. மேகதாது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க கேரள, புதுச்சேரி அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

மேகதாது குறித்து விவாதிப்பது இல்லை என முடிவு செய்த காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் நிகழ்ச்சிக் குறிப்பில் வேறு மாதிரி எழுதிவிட்டார். மேகதாது அணை விவகாரத்தில் மேல் நடவடிக்கைக்காக ஒன்றிய அரசின் நீர்வளத்துறை ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பிவைப்பதாக கூறியது தன்னிச்சையானது. தமிழ்நாட்டின் ஒப்புதலை பெறாமல் ஒரு செங்கலை கூட கர்நாடகா எடுத்து வைக்க முடியாது. கர்நாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அரசியலுக்காக மேகதாது பிரச்சனையை பேசுகிறார்கள். கர்நாடக சட்டப்பேரவையில் அறிவித்தாலும் மேகதாதுவில் தமிழ்நாடு ஒப்புதலின்றி அணை கட்ட முடியாது.

மேகதாது அணை குறித்து யாரும் அஞ்ச தேவையில்லை. மேகதாது அணைக்கு, தமிழகத்தை சேர்ந்த எந்த கட்சியும் அனுமதி கொடுக்காது. மேகதாது விவகாரத்தில், எதிர்க்கட்சி தலைவருக்கு உள்ள அதே அக்கறை, எங்களுக்கும் உள்ளது இவ்வாறு கூறினார். அமைச்சர் அளித்த பதிலில் திருப்தி இல்லை எனக்கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தது.

The post தமிழ்நாடு ஒப்புதலின்றி மேகதாதுவில் அணை கட்ட முடியாது: சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Megadatu ,Tamil ,Nadu ,Minister Duraimurugan Shyvatam ,Chennai ,Minister ,Duraimurugan ,Megadadu ,Tamil Nadu ,Edappadi Palanisami ,Kavari ,Megadadu Dam ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...