×

குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள இஸ்ரோவின் 2வது ராக்கெட் ஏவுதளம்.. வரும் 28ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்!!

தூத்துக்குடி : இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட உள்ள நிலையில், இதற்கான அடிக்கல்லை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி நாட்ட உள்ளார். வரும் 27, 28-ம் தேதிகளில் தமிழகத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வரும் 27-ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், அன்று இரவு சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தங்குகிறார். தொடர்ந்து 28ம் தேதி கோவை சூலூரில் இருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு பிரதமர் மோடி வருகிறார். அங்கு, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி, வஉசி துறைமுக விரிவாக்கப் பணி உள்ளிட்ட பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.

இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம்

இந்தியாவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை தொடர்ந்து இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்பட உள்ளது. திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினத்தில் 2,233 ஏக்கரில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்ட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு தூத்துக்குடி கடலோர பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் 2000 ஏக்கர் பரப்பில் விண்வெளிப் பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ரூ.550 கோடியில் கட்டப்பட்டுள்ள ராமேசுவரம் பாம்பன் பாலம் உள்ளிட்டவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

The post குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள இஸ்ரோவின் 2வது ராக்கெட் ஏவுதளம்.. வரும் 28ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்!! appeared first on Dinakaran.

Tags : Modi ,ISRO ,Kulasekharapatnam ,Thoothukudi ,Kulasekarapatnam ,Tamil Nadu ,
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...