×

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் உத்திரமேரூர் பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

உத்திரமேரூர், பிப்.22: உத்திரமேரூர் பகுதிகளில் உங்களை தேடி உங்கள் ஊரில் எனும் திட்டத்தின் கீழ், பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 24 மணி நேரம் மாவட்ட கலெக்டர் தங்கி இருந்து, மக்கள் கோரிக்கைகளை பெற்றும், அரசு நல திட்ட பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.

அதனடிப்படையில், இந்த மாதம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று காலை 9 மணி முதல் பல்வேறு இடங்களில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்விமோகன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் உத்திரமேரூர் அருகே மானாம்பதி நரிகுறவர்கள் குடியிருப்பு பகுதிகளில் சென்று அங்கு குடியிருப்புகளை பார்வையிட்டு, நரிகுறவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், பொதுமக்களிடம் மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அங்கு மருந்து இருப்புகள் மற்றும் சிகிச்சையும் முறைகளை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார். பின்னர், ₹50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டிட பணிகளை மற்றும் மானாம்பதி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து, மதிய உணவுகளை பரிசோதனை செய்தார். மேலும், பள்ளி மாணவர்களோடு உரையாடி, அவர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார். அங்கன்வாடி மையத்தில் பயின்று வரும் மாணவர்களின் எடை மற்றும் உயரம் குறித்து கோப்புகளை பார்வையிட்டார்.

பின்னர், வேடபாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் 100 நாள் பணிகள் மற்றும் பணியாளரின் வருகை பதிவேட்டை ஆய்வு மேற்கொண்டார்.
உத்திரமேருர் பேரூராட்சியில் ₹1.5 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகனமேடையினை பார்வையிட்டு, செயல்முறைகள் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து, உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். ஆய்வின்போது வட்டாட்சியர் கருணாகரன், பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன், பேரூராட்சி மன்ற தலைவர் பொன்சசிகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ராதாநடேசன், அரசு துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

The post உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் உத்திரமேரூர் பகுதிகளில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Uttaramerur ,Uttara Merur ,Collector ,Kalachelvi Mohan ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED பெருங்கோழி கிராமத்தில் அரசு நேரடி...