×

2 நாள் 2 பொதுக்கூட்டம் மோடி விசிட்டில் மாற்றம்: கொங்கு மண்டலம், தென் மாவட்டங்களை குறிவைக்கும் பாஜ

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழ்நாட்டின் பக்கம் பிரதமர் மோடி அடிக்கடி தலைகாட்டி வருகிறார். கடந்த மாதம் 2 முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தார். தற்போது மீண்டும் 2 நாள் சுற்றுப்பயணமாக வரும் 27,28ம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகிறார். 27ம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடத்துக்கு வரும் பிரதமர் மோடி அண்ணாமலை நடைபயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் 28ம் தேதி பகலில் ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வரும் பிரதமர், அங்கு புதிய துறைமுகம் பள்ளி அருகே நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அப்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில், தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் நாட்டின் 2வது ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல், தூத்துக்குடி வெளித் துறைமுக விரிவாக்கம் உள்ளிட்ட திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து 28ம் தேதி பிற்பகலில் நெல்லையில் பா.ஜ. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தென்மாவட்டங்களில் உள்ள 5 மக்களவை தொகுதிகளில் பாஜ போட்டியிட போவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் கொங்கு மண்டலத்திலும் கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளிலும் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொங்கு மண்டலம், தென் மாவட்டங்களை குறிவைத்து 2 பொதுக்கூட்டங்களை பாஜ ஏற்பாடு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

எடப்பாடியுடன் பேசியது என்ன? ரகசியத்தை சொல்ல மாட்டாராம் ஜி.கே.வாசன்

திண்டுக்கல்லில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தலில் கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசியது குறித்து, வெளிப்படையாக கூற முடியாது. அப்படி கூறினால், அது நன்றாக இருக்காது. இந்த தேர்தலிலும் சைக்கிள் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்து வருகிறோம். டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் ஒரு புறம் நியாயமானது என்றாலும், அவர்களை தூண்டிவிடுவது யார்? எதற்காக நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த வேகம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஏன் தனித்து நிற்க மாட்டீங்களான்னு கேட்க மாட்டுறீங்க: வருத்தப்படும் சரத்குமார்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தளக்காவூரில் சமக தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து வரும் 24ம் தேதி கும்பகோணத்தில் நடக்கவுள்ள கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். நீங்கள் அனைவரும் கூட்டணியா என தான் கேட்கிறீர்களே தவிர, ஏன் தனித்து நிற்கமாட்டீர்களா என கேட்க மறுக்கிறீர்கள். எங்கு போட்டியிடப் போகிறீர்கள் என கேட்டால் இன்னும் சந்தோஷமாக இருக்கும். இவை அனைத்திற்கும் உரிய அறிவிப்பு வரும் பிப்.24ம் தேதி வரும்’’ என்றார்.

The post 2 நாள் 2 பொதுக்கூட்டம் மோடி விசிட்டில் மாற்றம்: கொங்கு மண்டலம், தென் மாவட்டங்களை குறிவைக்கும் பாஜ appeared first on Dinakaran.

Tags : 2 Day 2 General Assembly ,Modi ,Kongu Zone ,Southern ,Tamil Nadu ,day 2 ,BJP ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் அதிக அணைகளை கொண்ட...