×

போலி அரசு அலுவலகம் நடத்தி ₹21 கோடி மோசடி; கேள்வி எழுப்பிய 10 காங். எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: குஜராத் பேரவையில் பரபரப்பு

காந்தி நகர்: போலி அரசு அலுவலக நிதி மோசடி விவகாரம் தொடர்பாக குஜராத் பேரவையில் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்ட 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவையில் இருந்து நாள் முழுக்க இடைநீக்கம் செய்யப்பட்டனர். குஜராத் மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சோட்டா உதய்பூர் மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்கான செயற்பொறியாளர் அலுவலகம் என்ற பெயரில் போலியான அரசு அலுவலகத்தை நடத்திய சிலர், அரசிடமிருந்து நீர்ப்பாசன திட்ட மானிய நிதியை பெற்று, மோசடியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சுமார் ரூ.21 கோடிக்கும் மேல் அரசுப் பணத்தை கையாடல் செய்தது கண்டறியப்பட்டது. இந்நிலையில் நேற்று நடந்த குஜராத் சட்டப் பேரவையில், காங்கிரஸ் எம்எல்ஏ துஷார் சவுத்ரி, ‘கடந்த ஆண்டில் மட்டும் 5 போலி அரசு அலுவலகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாநில அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது? சோட்டா உதய்பூரில் போலி அரசு அலுவலகம் நடத்தியவர்கள், அரசிடமிருந்து பெற்ற பணம் எவ்வளவு?’ என்று அவர் கேள்வியெழுப்பினார்.

இவ்விவகாரத்தில் மாநில அரசின் எழுத்துபூர்வ பதிலுக்கும், துறை அமைச்சர் வாய்மொழியாக அளித்த பதிலுக்கும் முரண்பாடுகள் இருப்பதாக கூறி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த மோசடிக்கு பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து, அவையில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேரையும் நாள் முழுக்க இடைநீக்கம் செய்து, பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். காங்கிரஸ் கட்சிக்கு 15 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், நேற்றைய பேரவை கூட்டத்தில் 5 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post போலி அரசு அலுவலகம் நடத்தி ₹21 கோடி மோசடி; கேள்வி எழுப்பிய 10 காங். எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: குஜராத் பேரவையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Barwada Gandhi Nagar ,Congress ,Gujarat council ,GUJARAT STATE ,SOTA ,10 Cong. ,Dinakaran ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...