×

தாராபுரத்தில் மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற வந்த தொழிலாளி பலி

*மையத்திற்கு அதிகாரிகள் சீல்

தாராபுரம் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா நகரில் திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் மது போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வு மையத்தை கடந்த ஓராண்டாக நடத்தி வந்தார். மது போதைக்கு அடிமையான பலரும் இங்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளனர். இந்நிலையில் காங்கயம் பங்களாபுதூர் ரோடு களிமேடு என்ற இடத்தைச் சார்ந்த கட்டிட தொழிலாளி மணிகண்டன் என்பவரை மது போதையில் இருந்து மீட்பதற்காக அவரது உறவினர்கள் இந்த மறுவாழ்வு மையத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் அனுமதித்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை மணிகண்டனுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மணிகண்டனுக்கு மது மறுவாழ்வு மையத்தில் அதிக வீரியம் உள்ள மருந்தை கொடுத்ததால் தான் அவர் திடீரென நெஞ்சுவலி வந்து உயிரிழந்தார் என புகார் கூறினர்.

இந்நிலையில், மணிகண்டன் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து மது போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் என்பவரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். இதில் அவரது பதில் முரண்பாடாக இருந்ததால் சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கும், தாராபுரம் கோட்டாட்சியருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் மது போதை மறுவாழ்வு மையத்தில் கார்த்திகேயனிடம் நடத்திய விசாரணையில் முறையான அனுமதி இல்லாமல் மது போதை மீட்பு மையம் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மையத்தில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த 35 நபர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முறையான அனுமதி பெறாமல் மது போதை மையம் நடத்தி வந்த கார்த்திகேயன் மீது மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் சந்திரசேகரன் உத்தரவின் பேரில் மேல் நடவடிக்கை எடுக்கும் வகையில் அந்த மது போதை மையத்தை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

The post தாராபுரத்தில் மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற வந்த தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Tarapuram ,Karthikeyan ,Gallimant, Dindigul district ,Anna Nagar, Tarapuram, Tirupur district ,Laborer ,Bali ,
× RELATED திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு...