×

2024-2025ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல்: தென்னை தோப்புகளில் வாழை, ஜாதிக்காய் ஊடுபயிராகப் பயிரிட ரூ.5.70 கோடி; அத்தி, கொடுக்காப்புளி பெருநெல்லி டிராகன் பழங்களை பயிரிட மானியம்

குறைந்த அளவு நீரை பயன்படுத்தி வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ஊட்டச்சத்து நிறைந்த அத்தி, கொடுக்காப்புளி, பெருநெல்லி, விளாம்பழம், இலந்தை, டிராகன் பழம் போன்ற பயிர்களைப் பயிரிடுதல், நீர் சேமிப்பு ஆதாரம் ஏற்படுத்துதல், வயல்களில் நீர் ஆவியாவதைக் குறைத்திட நெகிழி நிலப்போர்வை வழங்குதல் ஆகியவற்றிற்கு மானியம் வழங்க, ரூ.3.64 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தோட்டக்கலைப் பயிர்களுக்கான சாகுபடியினை அதிகரித்திடும் விதமாக, ரூ.2.70 கோடி ஒதுக்கீட்டில் தரமான நடவுச்செடிகள் மானியத்தில் வழங்கப்படும்.

தென்னை சாகுபடியை 10,000 ஏக்கர் பரப்பில் புதிதாக ஊடுபயிர் சாகுபடி மேற்கொள்ள, ஏழு லட்சம் தரமான தென்னை நாற்றுக்கள், 4 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதியில் வழங்கப்படும். தென்னை பயிரிட்டு, ஐந்து வருடம் வரையிலான தென்னந்தோப்புகளில் வாழையும், நன்கு வளர்ந்த தென்னந்தோப்புகளில் ஜாதிக்காயும் ஊடுபயிராகப் பயிரிட, 5 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தென்னை நாற்றங்கால்கள் அமைத்தல், நாற்றங்கால் மேம்பாடு, பழைய தென்னந்தோப்புகளைப் புதுப்பித்தல், தென்னங்கழிவுகளை மக்கச் செய்து இயற்கை உரங்களாக மாற்ற இயற்கை உரம் தயாரிக்கும் கூடம் ஏற்படுத்துதல் ஆகியவற்றிற்கு மானியம் வழங்குவதோடு, தென்னை நாற்றங்கால் மையங்களிலும், தென்னை செயல் விளக்கத் திடல்கள் அமைத்து உற்பத்தியினை அதிகரித்திட வழிவகை செய்யப்படும். இதற்கென, ரூ.12.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தென்னையில் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் 25,000 ஏக்கர் பரப்பில் செயல்விளக்கத் திடல்கள் அமைக்கப்படும். இதற்கென ரூ.12 கோடி மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தென்னையில் கேரளா வேர் வாடல் நோயினையும், வெள்ளை ஈக்களையும் கட்டுப்படுத்தத் தேவையான ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை உத்திகளை, விவசாயிகளுக்கு வழங்கிட, ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். உரிய நேரத்தில் தேங்காயை அறுவடை செய்தல், சூரிய சக்தி மின் உலர்த்திக் கூடத்தில் உலர்த்துதல், எண்ணெய் தயாரித்தல் முதலியன ஐந்து தென்னை நாற்றுப் பண்ணைகளில் செயல்விளக்கமாக நிறுவப்பட்டு, விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

* பட்டதாரி இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்கினால் ரூ.1 லட்சம் மானியம்
பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும் விதமாக 2024-2025ல், 100 இளைஞர்களுக்கு வங்கிக்கடன் உதவியுடன் கூடிய ஏதாவது ஒரு வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்காகப் பட்டதாரி ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கிட, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* பெருமழை காரணமாக ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ரூ.208 கோடி
பருவநிலை மாற்றத்தின் காரணமாக, தமிழ்நாட்டில் புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர் காரணமாக 25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையாக இதுவரை ரூ.4,436 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெருமழை போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ரூ.208 கோடியே 20 லட்சம் நிவாரணத்தொகை, 2 லட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.

* பருத்தி சாகுபடி இயக்கத்தால் உற்பத்தி 5.5 லட்சம் பேல் ஆக உயரும்
வணிகப் பயிரான பருத்தியில் அதிகத் தேவையுள்ள நீண்ட, மிக நீண்ட இழை ரகங்களை இந்தியாவின் ‘நூல் கிண்ணம்’ என்றழைக்கப்படும் தமிழ்நாட்டில், அதிக அளவில் உற்பத்தி செய்து நூற்பாலைகளுக்கு உரிய நேரத்தில் வழங்கி, அதன் மூலம் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திட “பருத்தி சாகுபடி இயக்கத்தை’’ ரூ.29 கோடியே 72 லட்சம் நிதியில் செயல்படுத்தியதன் காரணமாக, 2020-2021ல் 2 லட்சத்து 76 ஆயிரம் ஏக்கராக இருந்த பருத்தி சாகுபடிப் பரப்பு, 2022-2023ல் 4 லட்சத்து 27 ஆயிரம் ஏக்கராக உயர்ந்தது. உற்பத்தியும் 2 லட்சத்து 42 ஆயிரம் பேல்களிலிருந்து 3 லட்சத்து 19 ஆயிரம் பேல்களாக உயர்ந்துள்ளது. 2024-2025ல், பலன் தரும் பருத்தி சாகுபடி திட்டம் ரூ.14.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். இதனால், பருத்தி உற்பத்தி தமிழ்நாட்டில் 5 லட்சத்து 50 ஆயிரம் பேல்களாக உயரும்.

* அதிக உற்பத்தியை பெறும் விவசாயிகளுக்கு பரிசு
மாநில அளவில் சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணைய்வித்துகள், கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியைப் பெறும் முதல் மூன்று விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் , இரண்டாம் பரிசாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் என 33 பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2024-2025லும் இத்திட்டத்திற்காக 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதிக நீர் தேவைப்படும் நெற்பயிருக்கு மாற்றாக, குறைந்த நீர்த் தேவையுடைய மாற்றுப்பயிர்களான சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துப் பயிர்களை ஊக்குவிக்கும் வகையில், 2024-2025ல், ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாற்றுப் பயிர் சாகுபடித் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்குத் தேவையான விதை, உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள், நுண்ணூட்ட உரங்கள், இலைவழி உரத்திற்கு தெளிப்பு மானியம், அறுவடை மானியம் ஆகியவற்றுக்கு ரூ.12 கோடி ஒதுக்கப்படும்.

* கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்திட “ஒரு கிராமம் ஒரு பயிர்” புதிய திட்டம்
நாட்டின் உண்மையான முன்னேற்றம், கிராமங்களின் வளர்ச்சியில் உள்ளது என்ற காந்திய சிந்தனையில், கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்திட “ஒரு கிராமம் ஒரு பயிர்” என்ற புதிய திட்டம் 15 ஆயிரத்து 280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில், ஒரு கிராமத்திற்கு ஒரு பயிர் என்று 5முதல் 10 ஏக்கர் பரப்பில், நெல், சோளம், மக்காச்சோளம், கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பருத்தி, கரும்பு போன்ற முக்கியப் பயிர்களுக்கான நிலம் தயாரிப்பு, உயர் விளைச்சல் ரகங்களைப் பயன்படுத்துதல், விதை நேர்த்தி, விதைப்பு, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை உட்பட அனைத்துத் தொழில்நுட்பங்களையும் கடைப்பிடிக்க வைத்து, செயல் விளக்கங்கள் மேற்கொண்டு அதன் வாயிலாக விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், நன்மை செய்யும் பூச்சிகளைத் தெரிந்து கொள்ளவும், தீமை செய்யும் பூச்சிகளைத் தெரிந்து கொல்லவும் ஏதுவாக “நிரந்தரப் பூச்சிக் கண்காணிப்புத் திடல்கள்” வயல்களில் அமைக்கப்பட்டு, உரிய பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகள் விவசாயிகளுக்குப் பரிந்துரைக்கப்படும்.

* பயிர்களை பாதுகாக்க சூரிய சக்தி மின்வேலி அமைக்க ரூ.2 கோடி
வறட்சி, மழை, வெள்ளம், பூச்சித் தாக்குதல் போன்ற பல சவால்களுக்கிடையே, தான் இளைத்தாலும் பயிர்கள் செழிக்கப்பாடுபடும் விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது விளைந்த பயிர்களுக்கு விலங்குகளால் ஏற்படும் சேதாரம். அதிகரித்து வரும் மனித-விலங்கு மோதல்களால், பாடுபட்டு வளர்த்த பயிர்கள் பாழாகும் நிலையை மாற்றி, விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தில்லாமல் பயிர்களை காத்திடும் நோக்கில், இந்த நிதியாண்டில் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்கு 75 ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு சூரிய சக்தி மின்வேலிகள் அமைக்கப்பட உள்ளது. அதேபோல், குளம் தொட்டு, வளம் பெருக்கி வாழ்ந்த தமிழ்நாட்டில், விவசாயத்திற்குத் தேவைப்படும் நீர்ப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, மழை நீரைச் சேகரித்து, நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க, புதிய நீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் அமைத்திடவும், ஏற்கனவே அமைக்கப்பட்ட நீர் சேகரிப்புக் கட்டமைப்புகளைத் தூர்வாரி, ஆழப்படுத்தி அவற்றின் கொள்ளளவை அதிகரிக்கவும், 2024-2025ல், பல்வேறு நீர்வடிப்பகுதிகளில் 100 புதிய நீர்சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படுவதோடு, 500 நீர்சேகரிப்பு கட்டமைப்புகளில் பராமரிப்பு பணிகள் ரூ.2 கோடியே 75 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது.

* உயிர்ம விவசாயிகளை கவுரவிக்கும் வகையில் பாராட்டுப் பத்திரத்துடன் பணப்பரிசு
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சிகளில், கிராம முன்னேற்றக் குழுக்கள் அமைக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 2024-2025ல், 2,482 கிராம ஊராட்சிகளில் கிராம முன்னேற்றக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, ரூ.2.48 கோடியில் அட்மா திட்ட நிதி ஒதுக்கீட்டில் பயிற்சிகள் வழங்கப்படும். 2023-2024 முதல், தமிழ்நாடு அரசால் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் சிறந்த விவசாயிகளுக்கு “நம்மாழ்வார் விருது” வழங்கப்பட்டு வருகிறது. 2024-2025லும் உயிர்ம விவசாயிகளைக் கவுரவிக்கும் வகையில், பாராட்டுப் பத்திரத்துடன் பணப்பரிசும் முதல் மூன்று விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்கென 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். ஆதி திராவிட, பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் பயனடையும் வகையில், துறையின் மூலம் செயல்படுத்தப்படும் உயர் மதிப்புள்ள திட்டங்களுக்கு வழங்கப்படும் மானியத்துடன், கூடுதலாக 20 சதவீத மானியத் தொகை 2024-2025லும் இதற்கென ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* கன்னியாகுமரி, தஞ்சாவூரில் முல்லை, மருதம் பூங்கா: குமரியில் சூரியத் தோட்டம்
கொடைக்கானலில் பயிரிடப்பட்டுள்ள பேரிக்காய், பிளம்ஸ் போன்ற குளிர் மண்டல பழப்பயிர்களின் பழைய ரகங்களை, புதிய ரகங்களைக் கொண்டு ஒட்டுக்கட்டுதல் மூலம் புதுப்பித்து மரங்களின் மகசூலை அதிகரித்திட மானியம் வழங்கப்படும். இத்திட்டம், 370 ஏக்கர் பரப்பளவில், ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். முல்லைப் பூங்கா கன்னியாகுமரியில் உள்ள வேளிமலையில் ரூ.2 கோடியில் அமைக்கப்படும். காவிரி ஆற்றின் படுகையில் வளம் செறிந்த வயல் வெளிகள் நிறைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமலைச் சமுத்திரம் என்ற இடத்தில், ரூ.2 கோடியில் “மருதம் பூங்கா” அமைக்கப்படும். தமிழ்நாட்டில் பிரபல சுற்றுலாத்தலமாக கன்னியாகுமரி விளங்குகிறது. கன்னியாகுமரியில் சூரிய உதயப்புள்ளிக்கும் மறைவுப் புள்ளிக்கும் இடையே ஒரு தோட்டம் அமைத்தால் அது பார்வையாளர்களை மிகவும் கவரும். இதனைக் கருத்தில் கொண்டு, கடற்கரை அருகில் சூரியத் தோட்டம் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும்.

The post 2024-2025ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல்: தென்னை தோப்புகளில் வாழை, ஜாதிக்காய் ஊடுபயிராகப் பயிரிட ரூ.5.70 கோடி; அத்தி, கொடுக்காப்புளி பெருநெல்லி டிராகன் பழங்களை பயிரிட மானியம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED கியூட் நுழைவுத்தேர்வு இறுதி விடைக்குறிப்பு வெளியீடு