×

2024-2025ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல்: இயந்திர வாடகை திட்டத்தை வலுப்படுத்த ரூ.28.82 கோடியில் வேளாண் இயந்திரங்கள் கொள்முதல்

வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது:
வேளாண்மை பொறியியல் துறையின் 2,700 வேளாண் இயந்திரங்கள், கருவிகள், இ-வாடகை ஆன்லைன் செயலி மூலம் விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த குறைந்த வாடகைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பணிக்கு மேலும் வலு சேர்க்க, 2024-2025ல் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
* 85 மண்தள்ளும் இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்காக, 20 கனரக வாகனங்கள் கொள்முதல்.
* வேளாண் இயந்திரங்கள், உபகரணங்களைப் பாதுகாக்க, பழுது நீக்க, 25 வட்டாரங்களில் வேளாண் இயந்திரக் கூடாரங்கள்,
* 10 டிராக் வகை நெல் அறுவடை இயந்திரங்கள், 10 நெல் அறுவடை இயந்திரத்தை சுமந்து செல்லும் வாகனங்கள் கொள்முதல்.
* அதிக தேவையுள்ள வேளாண் கருவிகள், மண் அள்ளும் இயந்திரங்களுக்கான உதிரி பாகங்கள், கிரேன்கள், மின்சார ஜெனரேட்டர்கள் கொள்முதல்.
* வேளாண் இயந்திரங்களைச் சுத்தம் செய்து, பயன்படுத்தத் தேவையான வேளாண் இயந்திரங்கள் பராமரிப்புக்கான தொகுப்புகள் கொள்முதல். உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.28 கோடியே 82 லட்சம் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

அதேபோல், விவசாயிகளிடையே அதிகரித்து வரும் வேளாண் இயந்திரத் தேவையை நிவர்த்தி செய்து, உயர்மதிப்பு வேளாண் இயந்திரங்கள் பயன்பாட்டினை ஊக்குவிக்க, தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க விவசாயிகள், ஊரகத் தொழில்முனைவோர்கள், விவசாயச் சங்கங்கள், விவசாயக் கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, 2024-25ல், 207 வேளாண் இயந்திர வாடகை மையங்கள், ரூ.32 கோடியே 90 லட்சம் மானியத்தில் அமைக்கப்படும். மேலும், தனியார் வேளாண் இயந்திர உரிமையாளர்கள், விவசாயிகளை ஒருங்கிணைத்திட “தனியார் வேளாண் இயந்திரங்கள் வாடகை சேவை கைபேசி செயலி”, ரூ.50 லட்சம் செலவில் உருவாக்கப்படவுள்ளது.

* வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் 26,000 விவசாயிகளுக்கு ரூ.170 கோடி ஒதுக்கீடு
வேளாண்மை தொழிலை ஆட்பற்றாக்குறையினால் நலிவுறாமல் காப்பதற்கு வேளாண் இயந்திரமயமாக்குதல் இன்றியமையாதது என்பதால், வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம் தற்போது பெருமளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் விளையும் பயிர்களுக்கு ஏற்ற உழவு, நடவு, களையெடுத்தல், பயிர் மேலாண்மை, அறுவடை, பயிர்க்கழிவு மேலாண்மை போன்ற பணிகளை மேற்கொள்ள, பல்வேறு மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, டிராக்டர், சுழற் கலப்பை, வரப்பு செதுக்கி சேறு பூசும் கருவி, நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம், களையெடுக்கும் கருவி, தெளிப்பான்கள், டிரோன், நெல் அறுவடை இயந்திரம், பல்வகைப் பயிர் கதிரடிக்கும் இயந்திரம் போன்ற வேளாண் இயந்திரங்கள், கருவிகள், விளைபொருட்களை உலரவைத்து மதிப்புக் கூட்டிட சூரிய கூடார உலர்த்திகள் ஆகியவை விவசாயிகள் பயனடையும் வகையில் மானியத்தில் வழங்கப்படும்.

மேலும், சிறு, குறு விவசாயிகள் தங்கள் சிறிய நிலப்பரப்பில் வேளாண் பணிகளைத் தாங்களே மேற்கொள்ள உதவும் வகையில், நடப்பாண்டில் பவர் டில்லர்கள், பவர் வீடர்கள் 5 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. அதன்படி, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 2024-25ம் ஆண்டில், பவர் டில்லர்களின் மானிய தொகை ரூ.85 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு, பவர் டில்லர்கள் 4 ஆயிரம் விவசாயிகளுக்கும், பவர் வீடர்கள் 4 ஆயிரம் விவசாயிகளுக்கும் வழங்கப்பட உள்ளன.

அதன்படி, வயல்வெளிகளில் இரவு நேரங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பாம்புக்கடி பிரச்னை, மழைக்காலங்களில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்த்திடும் வகையில், தங்களது கிணறுகளுக்குச் செல்லாமலே மின்சார இணைப்பு பம்புசெட்டுகளை எங்கிருந்தாலும் எளிமையாக இயக்கவும், அவற்றின் இயக்கத்தை கண்காணிக்கவும் கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவிகளை 10 ஆயிரம் விவசாயிகள் வாங்கிப் பயனடையும் வகையில், 50 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட உள்ளன. அதனடிப்படையில், வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் ரூ.26 ஆயிரத்து 179 விவசாயிகள் பயனடையும் வகையில், இந்த நிதியாண்டில் ரூ.170 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* வேளாண் இயந்திரங்கள் வாங்கிட சிறு,குறு விவசாயிகளுக்கு 60 சதவீதம் மானியம்
உழவர் பெருமக்கள் கோரிக்கையின் படி, வேலையாட்கள் பற்றாக்குறை காரணமாக குறித்த நேரத்தில் வேளாண் பணிகளை மேற்கொள்வதில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும் வகையில், நெல் நாற்று நடவு இயந்திரங்கள் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை வாங்கி பயன்படுத்துவதை ஊக்குவிக்க, நடைமுறையிலுள்ள 50 சதவீத மானியத்துடன் கூடுதலாக 10 சதவீத மானியம் சேர்த்து, மொத்தமாக 60 சதவீத மானியம் வழங்கிட, இந்தநிதியாண்டில் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கொள்முதலுக்கு ஏற்றவாறு நெல்லின் ஈரப்பதத்தை குறைப்பதன் மூலம் நெல்லின் சேமிப்பு காலம் அதிகரிக்கும். இதனைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தில், தனிப்பட்ட விவசாயிகள், விவசாய சுய உதவிக் குழுக்கள், விவசாயக் கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர்களுக்கு, 10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட, ரூ.90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post 2024-2025ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல்: இயந்திர வாடகை திட்டத்தை வலுப்படுத்த ரூ.28.82 கோடியில் வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK Panneerselvam ,Agricultural Engineering Department ,
× RELATED 400இடங்களில் பாஜக வெற்றி என்பதில்...