×

அடுத்த டெஸ்ட்டில் பந்து வீசுவாரா? அமைதி காக்கும் ஸ்டோக்ஸ்

ராஞ்சி: முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பந்துவீசுவதைத் தவிர்த்து வரும் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்தியாவுடன் நடந்து வரும் தொடரில் எஞ்சியுள்ள 2 டெஸ்டிலும் மீண்டும் ஆல்ரவுண்டராக செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 4வது டெஸ்ட் ராஞ்சியில் நாளை மறுதினம் தொடங்க உள்ளது. இந்நிலையில் ராஞ்சி சென்றுள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் நேற்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அணியின் கேப்டனும் ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சு பயிற்சியிலும் ஈடுபட்டார். கடந்த ஆண்டு நவம்பரில் இடது முழங்கால் மூட்டு காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், அதன் பிறகு பேட்டிங்கை தொடர்ந்தாலும் பந்துவீசுவதை தவிர்த்து வருகிறார்.

நடப்பு தொடரில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வந்தாலும், போட்டியில் பவுலராக செயல்பட தயக்கம் காட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்டோக்ஸ் கூறியதாவது:
வலைப்பயிற்சியில் பந்துவீசும் தருணங்களை அழகாக உணர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக இலக்கை நோக்கி நகரவே விரும்புகிறேன். நான் எப்போதும் நானாக இருப்பதால், பெரும்பான்மையான விஷயங்களை அதிக நம்பிக்கையுடன் எதிர்கொள்வேன். அடுத்த டெஸ்ட்டில் நான் பந்து வீசுவதற்கான வாய்ப்புகள் குறித்து கேட்டால் ஆம் என்றும் சொல்லமாட்டேன். இல்லை என்றும் சொல்லமாட்டேன். எனது மருத்துவக் குழுவுடன் விரிவாக விவாதிக்க வேண்டி உள்ளது. பயிற்சியில் 100 சதவீதத் திறனுடன் பந்துவீச முடிந்தது திருப்தியாக இருந்தது. போட்டியிலும் அதை செயல்படுத்தி இருக்கலாம் என்றே தோன்றியது. ஆனாலும், அப்படி செய்திருந்தால் அது முட்டாள்தனமான முடிவாக இருந்திருக்கும்.

இவ்வாறு ஸ்டோக்ஸ் கூறினார். இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் கூறுகையில், ‘ஸ்டோக்ஸ் என்ன முடிவெடுத்தாலும் நான் ஆதரிப்பேன். ஏனென்றால் அவர் பெரிய புத்திசாலி. அவராகப் பந்து வீசலாம் என்று நினைக்கும் நிலை வரை அவர் பந்துவீச மாட்டார். ஆரம்பித்த பிறகு, அதை முழுமையாக முடிக்க முடியாமல் போனால் நன்றாக இருக்காது. எனவே திறமையான வீரரான ஸ்டோக்சின் நலத்தையும் கருத்தில் கொள்வோம்’ என்றார். ஆல்ரவுண்டரான ஸ்டோக்ஸ் அதிரடி பேட்டிங்குடன் வேகப் பந்துவீச்சாளராகவும் முத்திரை பதித்துள்ளார். இதுவரை 100 டெஸ்ட்களில் விளையாடி உள்ள அவர் 197 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

The post அடுத்த டெஸ்ட்டில் பந்து வீசுவாரா? அமைதி காக்கும் ஸ்டோக்ஸ் appeared first on Dinakaran.

Tags : Stokes ,Ranchi ,England ,Ben Stokes ,India ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பை தொடரில்...