×

குந்தா பகுதியில் வறட்சியால் காய்ந்து போன தேயிலை செடிகள் கவாத்து செய்வதில் விவசாயிகள் தீவிரம்

 

மஞ்சூர், பிப்.20: குந்தா பகுதியில் வறட்சியால் தேயிலை தோட்டங்களில் செடிகள் காய்ந்து போனதை தொடர்ந்து காவத்து செய்வதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் முக்கியத் தொழிலாக தேயிலை விவசாயம் மட்டுமே உள்ளது. சுமார் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையொட்டி குந்தா பகுதியில் மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், நஞ்சநாடு, மேற்குநாடு உள்ளிட்ட 9 கூட்டுறவு ஆலைகளும் ஏராளமான தனியார் மற்றும் எஸ்டேட் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் பனி விழத் துவங்கியது. தொடர்ந்து டிசம்பர் மற்றும் ஜனவரியில் உறைபனியும் கொட்டியது. நடப்பாண்டு பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் வறட்சியின் தாக்கமும் மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் வெயிலின் தாக்கமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் குந்தா பகுதியை சுற்றிலும் பல பகுதிகளில் தேயிலை தோட்டங்களில் செடிகள் கருகி போயுள்ளது.

இதனால் பசுந்தேயிலை வரத்து பலமடங்கு குறைந்தது. மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் உள்ள பெரும்பாலான கூட்டுறவு தொழிற்சாலைகளிலும் கடந்த சில தினங்களாக நாளொன்றுக்கு வெறும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கிலோ வரை மட்டுமே பசுந்தேயிலை வரத்து உள்ளதால் தேயிலைத்தூள் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குந்தா பகுதியில் உள்ள பெரும்பாலான தேயிலை தோட்டங்களிலும் செடிகள் காய்ந்து கருகி போய் காட்சியளிக்கிறது.இலைகள் இல்லாமல் காம்புகள் அனைத்தும் குச்சிகளாக மாறி போயுள்ளது. இதையடுத்து பெரும்பாலான விவசாயிகளும் தங்களது தோட்டங்களில் செடிகளை கவாத்து செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

The post குந்தா பகுதியில் வறட்சியால் காய்ந்து போன தேயிலை செடிகள் கவாத்து செய்வதில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kunta ,Kunda ,Gunda ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED குந்தா சுற்று வட்டார பகுதியில்...