×

பந்தலூர், கூடலூர் வட்டாரத்தில் ரேஷன் கடைகளில் ராகி, அரிசி வழங்காததால் மக்கள் அவதி

 

பந்தலூர், பிப்.19: பந்தலூர், கூடலூர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் ராகி, அரிசி வழங்காததால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்கும் வகையில் ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் 2 கிலோ ராகி வழங்கப்படும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ராகியில் கால்சியம், தாதுச்சத்துகள், புரதங்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து உள்ளிட்டவை உள்ளது. இதனால் இரத்த சோகையை போக்கி உடல் ஆரோக்கியம் காக்கிறது.

ஊட்டசத்து குறைபாடுகளை போக்கும் வகையில் ரேஷனில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 2 கிலோ அரிசி பிடித்தம் செய்து 2 கிலோ ராகி வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதமும் இந்த மாதமும் ராகி முறையாக வழங்கப்படாமல் உள்ளது. கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ராகி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் ராகிக்கு பதிலாக இரண்டு கிலோ அரிசியும் வழங்கப்படாததால் பொதுமக்கள் இரண்டுமே கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ராகியில் கல், மணல், குப்பைகள் நிறைந்து மிகவும் தரமின்றி காணப்படுவதால் அதிருப்தி அடைந்தனர்.

மேலும் ரேஷனில் வழங்கும் ராகியை பொதுமக்கள் அதனை வாங்கினாலும் சுத்தம் செய்து பயன்படுத்த இயலாமல் கோழிகள், மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தும் நிலையே உள்ளது. கூடலூர் பந்தலூர் பகுதியில் உள்ள தோட்டத்தொழிலாளர்கள், சிறு குறு விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ரேஷன் அரிசியை முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தற்போது ரேஷனில் 2 கிலோ அரிசி குறைக்கப்பட்டுள்ளது, இப்பகுதி மக்களுக்கு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே ராகியை தரமாக வழங்க வேண்டும் அல்லது ராகிக்கு பதிலாக கூடுதல் ரேஷன் அரிசியை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பந்தலூர், கூடலூர் வட்டாரத்தில் ரேஷன் கடைகளில் ராகி, அரிசி வழங்காததால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Kudalur ,Nilgiris district ,Pandalur, Kudalur ,Dinakaran ,
× RELATED இளம்பெண் தீக்குளித்து தற்கொலை