×

2வது இன்னிங்சில் சுருண்டது கர்நாடகா தமிழ்நாடு அணிக்கு 355 ரன் இலக்கு

சென்னை: கர்நாடக அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் சி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழ்நாடு அணிக்கு 355 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த கர்நாடகா முதல் இன்னிங்சில் 366 ரன் குவித்தது. தேவ்தத் படிக்கல் 151, சமர்த் 57, ஹர்திக் ராஜ் 51, ஷரத் 45 ரன் விளாசினர். தமிழக பந்துவீச்சில் அஜித் ராம் 4, சாய் கிஷோர் 3 விக்கெட் கைப்பற்றினர். 2ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்திருந்த தமிழ்நாடு, 3ம் நாளான நேற்று 151 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. ஜெகதீசன் 40, இந்திரஜித் 48, விமல் 14 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகா பந்துவீச்சில் விஜய்குமார் 4, சஷி குமார் 3, ஹர்திக் ராஜ் 2, கவெரப்பா 1 விக்கெட் வீழ்த்தினர். 215 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய கர்நாடகா 56.4 ஓவரில் 139 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. படிக்கல் 36, விஜய்குமார் 22*, ஹர்திக் ராஜ் 20, ஷரத் 18, மணிஷ் பாண்டே 14 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். இதைத் தொடர்ந்து, 355 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு அணி, 3ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 36 ரன் எடுத்துள்ளது. ஜெகதீசன் 8 ரன்னில் வெளியேறினார். விமல் குமார் 16, பிரதோஷ் ரஞ்சன் 10 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 9 விக்கெட் இருக்க, வெற்றிக்கு இன்னும் 319 ரன் தேவை என்ற நிலையில் தமிழ்நாடு இன்று கடைசி நாள் சவாலை சந்திக்கிறது.

 

The post 2வது இன்னிங்சில் சுருண்டது கர்நாடகா தமிழ்நாடு அணிக்கு 355 ரன் இலக்கு appeared first on Dinakaran.

Tags : Karnataka Tamil Nadu ,CHENNAI ,Tamil Nadu ,Ranji Trophy Elite C division league ,Karnataka ,MA Chidambaram Stadium ,Chepakkam, ,
× RELATED தமிழ்நாட்டில் அரசு மருத்துவர் ஊதிய...