×

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சன் குழுமம் ரூ.5 கோடி நிதி உதவி: மு.க.ஸ்டாலினிடம் கலாநிதி மாறன் வழங்கினார்

சென்னை: ‘மிக்ஜாம்’ புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சன் குழுமம் சார்பில் ரூ.5 கோடி நிதி வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் நேற்று வழங்கினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன், செயல் இயக்குநர் காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் நேற்று சந்தித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கினர்.

‘மிக்ஜாம்’ புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக இத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பேரிடர் ஏற்படும் காலங்களில் சன் குழுமம் மக்களின் துயர் துடைக்கும் பணியில் இறங்கி வருகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுக்கு கட்சி பாகுபாடு இல்லாமல் நிதியுதவி செய்து வருகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பேரிடர் ஏற்பட்டபோதும், சன் குழுமம் நிதி வழங்கியது. சுனாமி ஏற்பட்டபோது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சன் குழுமம் சார்பில் ரூ.5.5 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டது. கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டபோது ரூ.1 கோடி வழங்கியது. கொரோனா காலத்தில் கர்நாடகா மாநிலத்துக்காக அப்போதைய முதல்வர் எடியூரப்பாவிடம் சன் குழும செயல் இயக்குநர் காவேரி கலாநிதிமாறன் ரூ.3 கோடி வழங்கினார். கஜா புயல் வீசியபோது ரூ.2 கோடி வழங்கப்பட்டது.

அதேபோல, கார்கில் போரின்போது சினிமா துறையுடன் இணைந்து நிதி திரட்டி ஒன்றிய அரசிடம் நிதி வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் ரூ.30 கோடி நிதி வழங்கியது. மேலும், கொரோனா தடுப்பு பணிக்கு உதவும் வகையில் ரூ.10 கோடி நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சன் குழுமம் வழங்கியது. இதுமட்டுமல்லாமல், சன் பவுண்டேஷன் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. காதுகேளாதோர், இதய பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள், கண் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோயால் பாதிக்கப்படும் ஏழைகள் மற்றும் சிறுவர்கள், பெண்களுக்கு உதவிடும் வகையில் சன் குழுமம் பல கோடி ரூபாய் வழங்கி வருகிறது.

இதுதவிர, ஏழை மாணவர்களின் கல்விக்காகவும் நிதி அளிக்கப்படுகிறது. பள்ளி கட்டிடங்கள், வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்பறைகள், பயோ கழிப்பறை, தண்ணீர் தொட்டிகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. கிராமப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் வசதிகளையும் சன் குழுமம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில மக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பேரிடர், மருத்துவச் செலவு மட்டுமல்லாமல், ஏழை மாணவர்களின் கல்விக்காக ஏராளமான நிதி வழங்கி வருகிறது. பள்ளி கட்டிடங்கள், வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் போன்ற வசதிகளை ஏற்படுத்த சன் குழுமம் தாராளமாக நிதி வழங்கி வருகிறது.

The post முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சன் குழுமம் ரூ.5 கோடி நிதி உதவி: மு.க.ஸ்டாலினிடம் கலாநிதி மாறன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Sun Group ,Kalanidhi Maran ,M.K.Stalin. ,Chennai ,
× RELATED நாகை மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை