×

டெல்லியில் வரும் 19ம் தேதி இந்தியா கூட்டணி ஆலோசனை: ‘நான் அல்ல, நாம்’ முழக்கம் வெளியிட முடிவு

புதுடெல்லி: டெல்லியில் வரும் 19ம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, ‘நான் அல்ல, நாம்’ என்கிற முழக்கம் அறிவிக்கப்பட உள்ளது. வரும் மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. இதன் ஆலோசனை கூட்டம் கடந்த 6ம் தேதி டெல்லியில் நடந்தது. அதில், வேறு பிற நிகழ்ச்சிகள் இருந்ததால் மம்தா உள்ளிட்ட சில கட்சி தலைவர்கள் பங்கேற்கவில்லை. 17 கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து அடுத்த கூட்டம் டிசம்பர் 3ம் வாரத்தில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் 4வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் வரும் 19ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடக்கும்’’ என அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பதில் அளிக்கும் விதமாகவும், கூட்டணி கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாகவும், ‘நான் அல்ல, நாம்’ என்கிற புதிய முழக்கம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொகுதி பங்கீடு, கூட்டாக தேர்தல் பேரணிகளை நடத்துவது மற்றும் அவற்றுக்கான பொதுவான திட்டத்தை உருவாக்குவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரும் 17 முதல் 19ம் தேதி வரை டெல்லியில் இருப்பார் என்பதால் இக்கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது. மற்ற மூத்த தலைவர்கள் கலந்து கொள்வதை உறுதி செய்யும் பணி நடந்து வருவதாக கூட்டணி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

The post டெல்லியில் வரும் 19ம் தேதி இந்தியா கூட்டணி ஆலோசனை: ‘நான் அல்ல, நாம்’ முழக்கம் வெளியிட முடிவு appeared first on Dinakaran.

Tags : India Alliance ,Delhi ,New Delhi ,India ,
× RELATED இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேற பாஜக அழுத்தம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு