×

3வது டி20: இந்தியா ஆறுதல் வெற்றி

மும்பை: இங்கிலாந்து மகளிர் அணியுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவரில் 126 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் ஹீதர் நைட் அதிகபட்சமாக 52 ரன் (42 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். அமி ஜோன்ஸ் 25, சார்லி டீன் 16*, சோபியா டங்க்லி 11 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர் (4 பேர் டக் அவுட்). இந்திய பந்துவீச்சில் ஷ்ரேயங்கா பாட்டீல், சாய்கா இஷாக் தலா 3 விக்கெட், ரேணுகா சிங், அமன்ஜோத் கவுர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 127 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. மந்தனா, ஷபாலி இணைந்து துரத்தலை தொடங்கினர். ஷபாலி 6 ரன் மட்டுமே எடுத்து கெம்ப் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

எனினும், மந்தனா – ஜெமிமா ஜோடி பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் 2வது விக்கெட்டுக்கு 57 ரன் சேர்த்தனர். ஜெமிமா 29 ரன், தீப்தி 12 ரன், மந்தனா 48 ரன், ரிச்சா 2 ரன்னில் வெளியேறினர்.
இந்தியா 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் 6 ரன், அமன்ஜோத் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

The post 3வது டி20: இந்தியா ஆறுதல் வெற்றி appeared first on Dinakaran.

Tags : T20I ,India ,Mumbai ,T20 ,England Women ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்துடன் முதல் ஓடிஐ இந்தியா அமோக வெற்றி: கோஹ்லி 93 ரன் விளாசல்