×

எண்ணெய் கழிவு கலந்தது கடலை சுத்தம் செய்யும் கடலோர காவல்படை

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் கொசஸ்தலை ஆற்றில் தனியார் எண்ணெய் நிறுவனத்தில் இருந்து கழிவுகள் கசிந்து ஆறு, கடல் மற்றும் வடசென்னையில் எண்ணூர் அதனை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் கலந்து சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து இதை சரி செய்யும் பணியில் மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஈடுபட்டுள்ளது. மேலும் கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் இந்திய கடலோர காவல்படை ஈடுபட்டுள்ளது.

இது குறித்து இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் கூறியதாவது: எண்ணெய் கழிவுகள் எண்ணூர் அருகே உள்ள சிற்றோடைகள் வழியாக கொசஸ்தலை ஆற்றிலும் கலந்து, முகத்துவாரம் வழியாக கடலிலும் கலந்தது. காசிமேடு மீன்பிடி துறைமுகம் வரை கடலில் கலந்துள்ளது. இந்த கடலோர பகுதிகள் மீன்வளம் நிறைந்தவை. எண்ணெய் கசிவு சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பபை ஏற்படுத்தும். இதை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சிற்றோடைகள் ஆறுகளில் கலந்த எண்ணெய் அகற்றும் பணியை மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வருகிறது. கடலில் உள்ள கசிவுகளை அகற்றும் பணியை இந்திய கடலோர காவல் படை மேற்கொண்டு வருகிறது. ஹெலிகாப்டர்கள் மூலம் எண்ணெயை கரைக்கும் ரசாயனத்தை மிதக்கும் எண்ணெய் கசிவுகள் மேல் தூவி கசிவை அகற்றும் பணி நடைபெற்றது. இந்தியக் கடலோரக் காவல்படை கடல்சார் மண்டலங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளை எந்தவிதமான மாசுபாட்டிலிருந்தும் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post எண்ணெய் கழிவு கலந்தது கடலை சுத்தம் செய்யும் கடலோர காவல்படை appeared first on Dinakaran.

Tags : Coast Guard ,Chennai ,Migjam ,Kosasthalai river ,
× RELATED கடலோர காவல்படையில் திறன் வாய்ந்த...