×

திருவண்ணாமலையில் இன்று 2வது நாளாக அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் அலைமோதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வார இறுதி விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு குவிகின்றனர். அதன்படி கடந்த இரண்டு நாட்களாக கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது.

இன்று அதிகாலை கோயில் நடை திறக்கும் முன்பே, தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அதிகாலை நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி, கோபூஜை, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

ராஜகோபுரம் வழியாக பொது தரிசனமும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக கட்டண தரிசனமும் அனுமதிக்கப்பட்டது. கட்டண தரிசன வரிசையும், பொது தரிசன வரிசையும் திருக்கோயில் வெளி பிரகாரத்தில், வட ஒத்தைவாடை தெரு முதல் தேரடி வீதி வரையும், தென் ஒத்தைவாடை தெரு தொடங்கி ராஜகோபுரம் வரையிலும், கோயிலுக்கு வெளியே தேரடி வீதியில் தேர் நிலை நிறுத்தும் இடம் வரையிலும் சுமார் ஒரு கிமீ தூரம் வரை வரிசை நிண்டிருந்தது. அதனால், சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்த பிறகே தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

திருவண்ணாமலை வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் மேல்மருவத்தூர் பக்தர்கள் வருகை கடந்த சில நாட்களாக அதிகரித்திருக்கிறது. அதோடு, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகையும் அதிகரித்திருந்தது.பக்தர்களின் வருகை அதிகரித்திருந்ததால், சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.

குபேர கிரிவலம்
இந்நிலையில் திருவண்ணாமலையில் கடந்த சில ஆண்டுகளாக குபேர கிரிவலம் என்பது புகழ்பெற தொடங்கியுள்ளது. கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களில், ஏழாவது சன்னதியாக அமைந்திருக்கிறது குபேர லிங்கம். செல்வத்துக்கு அதிபதியாக கருதப்படும் குபேரன், சிவபெருமானை வழிபட்ட இடத்தில் அமைந்திருப்பதால், குபேர லிங்க சன்னதி என அழைக்கின்றனர்.

மேலும், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி மற்றும் சிவராத்திரி இணைந்து வரும் நாளன்று, குபேரன் கிரிவலம் சென்று வழிபடுவதாக நம்பிக்கை. எனவே, செல்வத்துக்கு அதிபதியாக கருதப்படும் குபேரன் கிரிவலம் செல்லும் நாளில், அவருடன் இணைந்து கிரிவலம் சென்றால் செல்வம் பெருகும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

அதனால், கடந்த சில ஆண்டுகளாக குபேர கிரிவல நாளில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, இந்த ஆண்டு குபேர கிரிவலம் செல்ல நாளை(11ம் தேதி) உகந்த நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, பிரதோஷ காலமான மாலை 4.30 மணிக்கு தொடங்கி 6 மணி வரை குபேர லிங்க சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெறும். குபேர பூஜை நடைபெறும் போது, குபேர லிங்க சன்னதியில் தரிசனம் செய்துவிட்டு, அதன்பிறகு பக்தர்கள் கிரிவலம் செல்லத் தொடங்குவது வழக்கம். அதையொட்டி, குபேர கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

The post திருவண்ணாமலையில் இன்று 2வது நாளாக அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் அலைமோதல் appeared first on Dinakaran.

Tags : Annamalaiyar Temple ,Tiruvannamalai ,
× RELATED பக்தர்களுக்கு தொல்லை கொடுத்த 30...