×

மாங்காடு நகராட்சி அலுவலக புதிய கட்டிடம் இடிந்து விழுந்தது: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 தொழிலாளர்கள்

குன்றத்தூர்: மாங்காடு நகராட்சி அலுவலகத்துக்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பணியில் இருந்த 5 தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாங்காடு நகராட்சி அலுவலகத்திற்கு மாங்காடு சக்திநகரில் கடந்த சில மாதங்களாக ₹3 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியில் 10க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கட்டிட பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், மழை நின்று இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியதும் இன்று காலை பணி துவங்கியது.

கட்டிடத்தின் தரை தளத்தில் தூண் அமைப்பதற்காக போடப்பட்டிருந்த சாரத்தை தொழிலாளர்கள் 5 பேர் பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென சாரத்துடன் சேர்ந்து காங்கிரீட் தூணும் பலத்த சத்தத்துடன் சரிந்து விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக 5 தொழிலாளர்களும் உயிர் தரப்பினர். சரிந்து விழுந்த தூண் கட்டிடத்திற்கு வெளிப்புறமாக விழுந்ததால் 5 பேரும் உயிர் தப்பியது தெரியவந்தது. ஒருவேளை தூண் கட்டிடத்தின் உள்பக்கம் சரிந்திருந்தால் 5 பேரின் நிலைமை கேள்விக்குறியாகி இருக்கும். அரசு கட்டிடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே காங்கிரீட் தூண் சரிந்து விழுந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, நகராட்சி புதிய கட்டிடம் இடிந்து விழும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாக வருவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மாங்காடு நகராட்சி அலுவலக புதிய கட்டிடம் இடிந்து விழுந்தது: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 தொழிலாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Mangau Municipal Office ,KUNRATHUR ,MANGADA MUNICIPAL OFFICE ,Dinakaran ,
× RELATED குன்றத்தூர் அருகே லோடு ஆட்டோ டிரைவர்...