×

சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகப்படுத்த முடிவு : தேவசம்போர்டு அறிவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகப்படுத்த முடிவு செய்துள்ளனர். முதியோர், குழந்தைகள், மாற்றுதிறனாளிகளுக்கென தனி வரிசைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மண்டலா மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட பின் பல மாநிலங்களில் இருந்து தினமும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். 1.25 லட்சம் பேர் வரை தினமும் தரிசனம் செய்ய வருவதால் 10 முதல் 14 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதனால் ஒரு மணி நேரம் முன்னதாக மாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

சபரிமலையில் தரிசனத்துக்காக கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் குவிந்தனர். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டதால் நேற்று தரிசனம் செய்ய 18 மணி நேரத்திற்கும் அதிகமாக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இதனால் ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த சில தினங்களாக பக்தர்கள் வருகை மிகவும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆன்லைனில் அதிகபட்சமாக 90 ஆயிரம் பேர் வரை மட்டுமே தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய முடியும். ஆனால் அதையும் தாண்டி திருவனந்தபுரம், எருமேலி, நிலக்கல், பம்பை உள்பட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள உடனடி முன்பதிவு கவுண்டர்கள் மூலமும் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வருகின்றனர். கடந்த சில நாட்களாக பக்தர்கள் மிக அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால் அவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

பல மணி நேரம் வரிசையில் காத்திருப்பதால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். இதனால் பக்தர்களுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்த பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் மற்றும் டிஜிபிக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் எந்த பலனும் ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து நேற்று கேரள உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு கூடியது.

பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க சபரிமலை தந்திரியுடன் ஆலோசித்து தரிசன நேரத்தை அதிகரிக்க முடியுமா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகப்படுத்த முடிவு செய்துள்ளனர் அதன்படி ஒரு மணி நேரம் முன்னதாக மாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

The post சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகப்படுத்த முடிவு : தேவசம்போர்டு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Devsambord ,Thiruvananthapuram ,
× RELATED சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு...