- கலகலம்
- வ்ரிஞ்சிபுரம்
- சிம்மகுளம்
- மார்க்பாண்டீஸ்வரர் கோயில்
- வேலூர்
- வாரஞ்சிபுரம் மார்க்பாண்டீஸ்வரர் கோயில்
- நள்ளிரவு சிம்மகுளம்
- வ்ரிஞ்சிபுரம்
- நள்ளிரவு சிம்மகுளம் திறப்பு
வேலூர்: விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கடை ஞாயிறு விழாவையொட்டி நள்ளிரவு 12 மணியளவில் சிம்மக்குளம் திறக்கப்பட்டது. வேண்டுதலுக்காக ஏராளமான பெண்கள் சிம்ம குளத்தில் நீராடி ஈரத்துணியுடன் கோயிலில் படுத்து உறங்கி பிரார்த்தனை செய்தனர்.
வேலூர் அடுத்த விரிஞ்சிபுரத்தில் மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத கடைசி ஞாயிற்று கிழமையன்று கடை ஞாயிறு திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அப்போது நள்ளிரவில் ஆண்டுக்கு ஒருமுறை திறக்கும் சிம்மகுளத்தில் நீராடி கோயில் மண்டபத்தில் படுத்துறங்கி மார்க்கபந்தீஸ்வரரை வேண்டினால் குழந்தை பாக்கியம் உள்பட பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அதன்படி கடைஞாயிறு விழாவையொட்டி நேற்று பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவர் மார்க்கபந்தீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மாக தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து நேற்றிரவு 7 மணிக்கு கோயில் குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
குழந்தை வரம் வேண்டி குவிந்த பெண்கள் பாலாற்றில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் வந்து சிம்ம குளத்தில் நீராட வரிசையில் காத்திருந்தனர். தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்து சிம்ம குளத்தை திறந்து வைத்தனர். தொடர்ந்து சிம்மகுளத்தில் இறங்கி பூஜைகள் செய்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மூலவர் மார்க்கபந்தீஸ்வரர், மரகதாம்பிகை தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதையடுத்து பாலாறு, பிரம்ம தீர்த்த குளத்தில் நீராடி வரிசையில் காத்திருந்த பெண்கள், ஒருவர் பின் ஒருவராக சிம்ம குளத்தில் நீராடினர். பின்னர் மார்க்கபந்தீஸ்வரரை தரிசனம் செய்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஈரத்துணியுடன் கோயில் வளாகத்தில் படுத்து உறங்கி மனமுருகி வேண்டினர்.
இந்நிலையில் இன்று காலை மார்க்கபந்தீஸ்வரர், மரகதாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து 6.30மணியளவில் பிரம்மகுளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது சூலநாதருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்பட பல்வேறு பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து 9 மணியளவில் பாலகன் சிவசர்மனுக்கு(பிரம்மன்) உபநயன சிவதீட்சை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து மார்க்கபந்தீஸ்வரர், மரகதாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மாட விதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கோயில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கடந்த காலங்களில் சிம்ம குளத்தில் நீராடி பிள்ளைப்பேறு பெற்ற பெண்கள், கோயில் உட்பிரகாரத்தில் உள்ள பலா மரங்களில் தொட்டில் கட்டி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
The post விரிஞ்சிபுரத்தில் கடைஞாயிறு விழா கோலாகலம்; மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் நள்ளிரவு சிம்மக்குளம் திறப்பு: திரளான பக்தர்கள் புனித நீராடினர் appeared first on Dinakaran.
