×

கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் 200 நிர்வாகிகள் ராஜினாமா தேனி மாவட்ட பாஜ காலி: மாவட்ட தலைவர் மீது சரமாரி குற்றச்சாட்டு

தேனி: தேனி மாவட்ட பாஜ தலைவரை கண்டித்து, 200 நிர்வாகிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி பராளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளராக மாவட்ட ஊராட்சி துணை சேர்மன் ராஜபாண்டியன், இணை பொறுப்பாளராக போடி ராமநாதன் ஆகியோரை கட்சித் தலைமை அறிவித்தது. இதனை கண்டித்து தேனி மாவட்டம் முழுவதும் பாஜ நிர்வாகிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்து போஸ்டர்களை ஒட்டினர். இந்நிலையில், தேனி மாவட்ட பாஜ தலைவர் பி.சி.பாண்டியன், கடந்த 7ம் தேதி பெரியகுளம் செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ள அமுதா திருச்செல்வன் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கினார். மேலும், ஆண்டிபட்டி ஒன்றியத் தலைவர் ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன், விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத்தலைவர் திருமல்ராஜ் ஆகிய மூவரையும் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று தேனி நகர் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள மாவட்ட பாஜ அலுவலகம் முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மற்றும் கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பாஜவினர் திரண்டனர். அப்போது மாவட்ட தலைவர் பி.சி.பாண்டியனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும், பி.சி.பாண்டியனை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும், தேனி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ராஜபாண்டியன், போடி ராமநாதன் ஆகியோரை அந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து மாநில, மாவட்ட நிர்வாகிகள், சரவணன், பிரபாகரன், ரவி மற்றும் சிவக்குமாரன், ராஜா, முருகத்தாய், சின்னத்தாய், ராஜீவ் காந்தி, அய்யர் உள்ளிட்ட சுமார் 200 பேர் தங்களது கட்சிப்பதவிகளை ராஜினாமா செய்வதாக கூறி ராஜினாமா கடிதங்களை கட்சி அலுவலகத்தில் அளித்தனர். இதனால் அம்மாவட்ட பாஜ கூண்டோடு காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது..

 

The post கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் 200 நிர்வாகிகள் ராஜினாமா தேனி மாவட்ட பாஜ காலி: மாவட்ட தலைவர் மீது சரமாரி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Theni ,District ,Baja Galli ,BJP ,
× RELATED தேனி மாவட்டத்தில் கண்மாய்களை...